Suryaa's Blog

எழுத்துப்பிழை- சூர்யா பாலகுமாரன்

நான் ஒரு மக்கு, அத்தனை அறிவு கிடையாது. சொந்தபுத்தியும் சுயபுத்தியும் கிடையாது என்று பல முறை ஆணி அடித்தது போல் கூறி வளர்க்கப்பட்டவன். வீட்டில் ஒரு வித தமிழ், விளையாடும் இடத்தில் வேறு ஒரு விதமான தமிழ், பேசும் தமிழ், படிக்கும் தமிழ், கேட்கும் தமிழ் என்று விதவிதமான தமிழ்களோடு வளர்க்கப்பட்டவன். பாடங்களில் ஒரு ஆங்கிலம், படங்களில் வேறு ஆங்கிலம், புத்தகங்களில் இன்னும் வேறு  வித ஆங்கிலம் என்கிற Linguistic குழப்பத்தில் சிக்கிக்கொண்ட பல நூறு மக்குகளில் நானும் ஒருவன். நானே முதல்வன் என்று கூட வைத்துக்கொள்ளலாம். 

நான் முழுமையாக ஆங்கிலம் பேசப் பயின்றது வேலைக்கு சென்றதற்கு பிறகே. கல்லூரியில் கூட பூசிமழுப்பி ஓரிருவரிகளை வைத்துக்கொண்டே தப்பித்துவிட்டேன். வேலை கிடைத்த பிறகு தான் ஆங்கிலத்தில் சில உச்சரிப்புகள் கூட கேலிக்கூத்துடன் திருத்தப்பட்டது. அவமானத்திற்கு பயந்து ஆங்கிலம் கற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று.  

எனக்கு இப்போது ஆங்கிலம் சரளமாக வரும். பெரிய தயாரிப்பாளர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும்  தமிழில் எழுதிய திரைக்கதையை மூன்று மணி நேரம் எந்த தடங்கலும் விக்கலும் திக்கலுமின்றி ஆங்கிலத்தில் சரசரவென்று ஒரே மூச்சில் கூற முடியும். இது எனக்கே ஆச்சர்யம். நாளிடையில் நடந்த பயிற்சி. எதிரே நிற்பவனுக்கு நம் நிலை புரியாமல் போய்விடுமோ என்கிற பயமும் பரிதவிப்பும் “இன்னும் இன்னும் இன்னும்” என்று வளர்த்தது. வெட்கப்படாமல் அர்த்தங்கள் கேட்டு வார்த்தைகளைத் தேடித் தேடி….அந்த தேடல் கதைக்கு கதை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. புதிய சொற் தொடர்கள், வாக்கியங்கள், idioms and phrases என்று அன்பாக இந்த உலகம் நம்மை நட்புடன் வளர்த்துக்கொண்டே போகிறது. இது ஆங்கிலத்திற்கு மட்டுமே பொருந்தும்.

தமிழுக்கு வருவோம்.  தமிழ் பேசும் நல்லுலகுக்கும் ஆசிரியப்பெருமக்களுக்கும் பிழைதிருத்தும் பெருமக்களுக்கும் என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள். 

நான் ஒரு மக்கு, எனக்கு அத்தனை அறிவு கிடையாது. இதில் என்னுடைய தமிழ் அவ்வப்போது பாலகுமரனின் தமிழுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. பாலகுமாரனின் மகானாக பிறந்துவிட்டு இத்தனை எழுத்துப்பிழையா என்று அதட்டுகிறது. பாலகுமரான் சாரைப் போல் மூலை முடுக்கெல்லாம் தமிழ் வழிந்தோடும் தமிழ்ப் பண்டிதை வாழ்ந்த வீட்டில் நான் வாழவில்லை. பாலாவிற்கு நான் தமிழ் படித்தே ஆகவேண்டும், படித்து அவர் பெயரை காப்பாற்ற வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. இஷ்டமிருந்தா படி இல்லைன்னா படிக்காத. அது தமிழோ ஸ்பானிஷோ வயலினோ டான்ஸோ எதுவா இருந்தாலும் சரி, இஷ்ட்டமிருந்தா மட்டும்…. என்று லகான் கழட்டி ஓடவிட்டுவிட்டார். நான் அலைந்து திரிந்து விழுந்தடித்து ஓடி முட்டி நின்ற இடம் சினிமா. அங்கு கூட நான் எழுத்தாளர் மகனாக என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை. ஒப்பிடுவார்களோ என்கிற பயம். அவர் மகனா நீ இந்தா 400 வார்த்தைகள்ல ஒரு கதை எழுது கவிதை எழுது என்று பேப்பர் பேனா நீட்டிவிடுவார்களோ என்கிற பயம். பொத்திப் பொத்தி வைத்த பின்பும், உண்மை தெரிந்து நீயும் உங்க அப்பா மாதிரி books எழுதுவியா, வசனம் எழுதுவியா என்று சரம் தொடுக்கப்பட்டது. அப்படியே எழுதினாலும் என்னது இது இத்தனை பிழை. எழுத்துப் பிழைக்கு பயந்து எழுதாமல் போனதும் எக்கச்சக்கம்.

அய்யா எனக்கு புறனானூறு தெரியாது, சிற்றிலக்கியங்கள் தெரியாது. எனக்கு இலக்கியங்களைப் பற்றிய அறிமுகம் இன்னும் சரியாக கிடைக்கவில்லை. அதில் முழு வீச்சுடன் இறங்குவது பற்றி இப்போது நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் கண்டிப்பாக அதை கரைத்துக்குடிக்காவிட்டாலும் atleast கடந்து செல்ல வேண்டும் என்ற முடிவுடன் தான் இருக்கிறேன். சரியான நண்பர் கூட்டம் தேவை அதற்கு. அது தானாக அமையும். எனக்கு புத்தகங்கள் மற்றும் நாவல்கள் அறிமுகமாகும் போது தான் தமிழும் இன்னும் அழுத்தமாக அறிமுகமாகியது. குறிப்பாக தி. ஜா. கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் புத்தகங்கள் மட்டும் எந்தவித திக்கலும் முக்கலுமில்லாமல் புரிந்து படிக்க நேர்ந்தது. இன்று வரை வேறு சில எழுத்தாளர்களின் பக்கங்களை கடப்பதற்கு கூட கடினமாக இருக்கிறது. வட்டார வழக்கு, பேச்சுத்தமிழ் என்று தினரடித்து விளங்கிக்கொள்வதற்குள் நாள் முடிந்துவிடுகிறது. இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனையாக கூட இருக்கலாம்.

முதலில் பாலாவின் புத்தகங்களை மட்டுமே படித்து முடிப்போம். இல்லையெனில் அவரோட மகனாக பிறந்துவிட்டு அவர் புத்தகங்களையே படிக்கவில்லையென்றால் எப்படி என்கிற அவல் வாய்க் கேள்விகளை தவிற்பதற்கு உதவும். என்னுடைய இலக்கியம் இன்னும் சில வருடங்களுக்கு பாலகுமாரன் மட்டுமாகத்தான் இருக்கப்போகிறது. அவ்வப்போது சற்று நீண்டு நரன்,சாரு நிவேதிதா, முகில், ராம்ஜி, ஜெயராமன் ரகுனாதன், வைரமுத்து சார் என்று ஜாலியாக இருந்துவிட்டு மீண்டும் பாலாவிடம் அண்டிக்கொள்ள வேண்டும். இதுவே என்னுடைய நிலை.

என்னுடைய மொழி திரை. என்னுடைய ஆளுமை சினிமா. Tamil is my language of convinience மட்டுமே. எனக்கு எழுதும் ஆர்வமும் நிறைய இருக்கிறது. இப்பேற்பட்ட மக்கு தமிழில் எழுதினால் பிழை  இருக்கத்தான் செய்யும். பொருத்துக்கொள்ளுங்கள். அன்பாக திருத்துங்கள். தயவு செய்து பாலாவுடன் ஒப்பிடாமல் திருத்துங்கள். துபாயிலிருந்து ஒரு நண்பர் எனக்கு மெஸேஜ் செய்து ஃபோன் நம்பர் வாங்கி வாட்ஸாப்பில் பிழை திருத்தினார். அவரை துபாய் அண்ணன் என்று மொபைலில் சேவ் செய்திருக்கிறேன். இப்படி அங்காங்கே பிச்சு பிடுங்கித்தான் நான் என்னுடைய தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். அதனால் தயவுசெய்து என் எழுத்துப்பிழையை பொருத்துக்கொள்ளவும்…

சப்ப்ப்பப்ப்ப்ப்ப்ப்ப்பா…….

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *