ஜகன்னாதர் குடி கொண்டிருக்கும் புரியை சாத்வீகன் என்ற அரசன் ஆண்டு வந்தான். கோவில் தோன்றியதிலிருந்து இன்றுவரை அதில் ஆயிரக்கணக்கான மன்னர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். அதில் சாத்வீகனும் ஒருவன். சாத்வீகன் நல்லவன். திறமைமிக்கவன் கடவுள் பக்தி உடையவன். கற்றோரை நேசிப்பவன். மற்றொருக்கு உதவி செய்பவன்.நடுநிலை தவறாது தீர்ப்பு சொல்பவன். நற்குணங்கள் நிரம்பியிருந்த அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. கவராடுதல் கெட்ட பழக்கம் என்றுத் தெரிந்தும் அதில் ஆவல் இருந்தது. அதில் ஈடுபட்டால் உலகத்தையே மறந்துவிடுகின்ற குணம் இருந்தது. ஆனால் கெட்டிக்காரனாக கவராடும் இடத்திற்குப் போகாமலும், சூதாட்டக் கட்டங்களை பார்க்காமலும், சோழிகளை தொடாமலும் விலகி வந்தான்.
ஒருநாள் மாலை கோவிலுக்கு வரும்போது கோவில் முன் மண்டபத்தில் சாதுக்கள் சிலர் சூதாடிக் கொண்டிருந்தார்கள்.எட்டு இரண்டுக்கு எட்டு எட்டுக்கு மராட்டம். மராட்டத்தில் தாயம். தாயத்திற்கு மராட்டம். மராட்டத்தில் இரண்டு. இரண்டுக்கு வெட்டு. வெட்டுக்கு மராட்டம். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசன் குதூகலித்தான். அந்தக் காயை நகர்த்து. இந்தக் காயை நிறுத்து. கூச்சலிட்டான்.
ஆடிய சாது தடுமாற ‘அடச் சீ எழுந்திருடா’ என்று அதட்டி விலக்கினான். அவன் உட்கார்ந்து கொண்டான். அவனுடைய சோழிகள் பேசின. சிரித்தன். ஆரவாரித்தன. உடன் வந்திருந்த மந்திரிகள் கவலைப்பட்டார்கள். கோவிலுக்கு வந்துமா இந்த கூத்து என்று நொந்து கொண்டார்கள். இது எங்குபோய் முடியுமோ என்று கவலைப்பட்டார்கள்.
அபிஷேகத்திற்கு எல்லாம் தயார். உங்களை உள்ளேகூப்பிடுகிறார்கள்.
அது தொடர்ந்து நடக்கட்டும். சோழியை போட்டா அரசன் உத்தரவிட்டான். சொன்னது அரசனல்லவா எதிர்க்க எவருக்கும் துணிவில்லை
.ஆட்டம் தொடர்ந்தது. வெட்டுக்கு மராட்டம் மராட்டத்தில் வெட்டாட்டம் என்று பின்னிப் பின்னி போயிற்று. கோவில் அர்ச்சகர்கள் கவலைப்பட்டார்கள். அபிஷேகம் முடிந்தது. அலங்காரம் ஆரம்பிக்கலாமா வருகிறீர்களா.
அது பாட்டுக்கு நடக்கட்டுமே இதோ வருகிறேன். அரசன் மறுக்கவில்லை. போகவும் இல்லை.
சூதாட்டம் என்பது மனித புத்தியின் ஒருவித கோணல். உணவு நாவின் பழக்கம். பாட்டு தொண்டையின் பழக்கம். காமம் உடம்பின் பழக்கம். குளித்தல் முதுகின் ஆதங்கம். மனிதன் பழக்கத்தால் ஆனவன். அவன் பழக்கமே அவன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் பழக்கம் உள்ளவர்களே உறவுகள் நட்புகள். பழக்கம் இல்லாதவர் எதிரிகள். அல்லது கேள்விக் குறியானவர்கள்.
தினசரி பழக்கம்தான் என்று யோசித்தால் சூதாட்டம் புத்தியின் பழக்கம் என்பது தெரிய வரும். அது ஒரு அமைப்பு. ஒரு ஆற்றாமை. ஒரு போதை. மைதுனம் போன்ற சுகம் அதில் உண்டு. அங்கே வெற்றி பெரும் களிப்பு. தோல்வி கொலையும் செய்யும். இதனால்தான் சூதை பெரியவர்கள் கேவலம் என்றார்கள்.
ஆனால் கோவிலில் சூதாடுவது கேவலத்திலும் கேவலம். ஆனால் அரசனே ஈடுபடுகிற போது யாருக்கும் புத்தி சொல்ல தைரியமில்லை.
அலங்காரம் முடிந்தது. அர்ச்சனை நடக்கிறது.
நடக்கட்டும்.
அர்ச்சனை முடிந்தது. ஆரத்தி காட்டுகிறார்கள்.
நடக்கட்டும்.இந்த ஆட்டம் முடிந்து எழுந்து விடுவேன்.
அரசன் எழுந்திருக்கவில்லை.
மன்னா, இந்தாருங்கள் பகவத் பிரசாதம்.
தாயம் எட்டுக்கு வெட்டு. வெட்டுக்கு மராட்டம். மராட்டத்தில் பன்னிரெண்டு. வலக்கையில் சோழிகளை உருட்டியபடி இடக்கையை பிரசாதத்திற்கு நீட்டினான். அர்ச்சகர் திகைத்தார்.
அரசனே ஆனாலும் ஒரு வரைமுறை வேண்டுமல்லவா. இடக்கையை நீட்டுபவனுக்கு எதற்கு பிரசாதம். தராது போனால் தண்டிப்பான்.
தண்டிக்கட்டுமே. இடக்கையில் பிரசாதம் ஒருநாளும் வைக்க மாட்டேன். அது கடவுளுக்கு செய்யும் அவமானம். தெய்வ நிந்தனை.
அர்ச்சகர் உள்ளே போய் விட்டார்.
அத்தனை காய்களும் கட்டங்களின் கோட்டைக்கு குடியேற அரசன் வெற்றி வெற்றி என்று முழக்கமிட்டு எழுந்திருந்தான். அந்த சூதாட்டத்தில் அவன் ஜெயித்து விட்டான்.
ஏன் சன்னதி அடைத்திருக்கிறது? ஆவலாகக் கேட்டான். நடந்ததை மந்திரிப் பிரதானிகள் விவரித்தார்கள்.
சே,எவ்வளவு ஒரு மோசமான மனிதன் நான். கோவிலில் சூதாட்டமா, அதுவும் நேரம் தெரியாத விளையாட்டா, ஆரத்திக்கு அழைத்த போதும் போகவில்லையா, பிரசாதம் வாங்க இடக்கையை நீட்டினேனா. வலக்கையில் சோழியா. பாண்டுரங்கா பாண்டுரங்கா எப்பேர்பட்ட அறிவிலி நான். எத்தனை மோசமான அயோக்கியன்
நான். அழுதான் . அலறினான். இடிந்து போய் மறுநாள் முழுவதும் உட்கார்ந்திருந்தான். தவறெனில் தண்டனை உண்டல்லவா. அரசனே ஆனாலும் பிழை பிழைதானே. இந்தப் பிழைக்கு என்ன தண்டனை. கோவிலில் சூதாடிய வலக்கையை வெட்டு, சோழியை உருட்டிய கையை துண்டித்துப் போடு. உள்மனம் சீறியது.
ஆனால் அரசன் கையை யார் வெட்டுவார்கள். அது ஒரு பாபமாகி விடாதா. மந்திரியை கூப்பிட்டான். என் அறையில் ஒரு பூதம் வருகிறது. தன் நீண்ட கையை நீட்டி என்னை தொட முயற்சிக்கிறது. மும்மரமாக கதை விட்டான். அந்தக் கை ஜன்னலுக்கும் வெளியேயும் போகிறது. உள்ளே வருகிறது. இன்று இரவு என் அறையிலிருந்து ஜன்னலுக்கு வெளியே ஏதேனும் கை தெரிந்தால் சட்டென்று வெட்டி விடு. பயப்படாதே. தயங்காதே. என்று உற்சாகப்படுத்தினான்.
மறுநாள் கை நீட்டினான். கையை மந்திரி ஒரே வீச்சில் துண்டித்தான். அரசன் அலறும் சப்தம் கேட்டது. மயங்கி விழுந்த அரசனை தூக்கிக் கொண்டு வைத்தியனிடம் ஓடினார்கள். வைத்தியன் ரத்த ஓட்டம் நிறுத்தினான். வலி மருந்து கொடுத்தான். அரசன் உயிர் காப்பாற்றினான். அந்த வலக்கை எங்கே என்று கேட்டான். அரசன் கட்டளைப்படி அந்த வலக்கை பாண்டுரங்கன் சன்னதிக்கு போயிருக்கிறது. பிரசாதத்திற்கு நீளாத அரசன் வலக்கை பாண்டுரங்கனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. தட்டில் துணி போட்டு மூடி எடுத்துப் போனார்கள். அங்கு போய் திறந்து பாண்டுரங்கனுக்கு காட்டினார்கள். அது கை அல்ல. நீண்ட தவனக் கொத்து. வாசனை மூக்கை துளைத்தது. அரசனுக்கு செய்தி சொல்ல, அவன் தள்ளாடி வந்தான். பாண்டுரங்கனை தழுவிக் கொண்டு அழுதான். பாபம் செய்த கை என்பதால் தவனமாக மாற்றி விட்டீர்களா ஸ்வாமி என்று விம்மினான்.
சட்டென்று தவனமும் காணோம். அரசனுக்கு வலது கை வந்தது. மனமாற கும்பிட்டான். பல பூஜைகளில் பங்கெடுத்துக் கொண்டான். தவறிழைத்து தண்டனைப் பெற்று தெளிந்தவன் ஆட்சி மிக சுபீட்சமமாக இருக்கும். ஜகன்னாதர் கோவில் கொண்ட புரி சுபீட்சமமாக இருந்தது. புரி அந்த அரசனால் சுபீட்சமாக இருந்தது. தவறு செய்வதே உயர்வு என்று கருதுபவர் ஆட்சிதான் மக்களை வருத்தெடுக்கும். வதைக்கும். பணிவுதான் தவறு செய்யாமல் தடுக்கும். அந்தப் பணிவு வர கடவுள் பக்தி ஒரு காரணம்.