Blog

என் அம்மாவும் சில சிந்தனைகளும் – பாலகுமாரன்

ந்த மாதிரி பண்டம் நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா? எனக்குத் தெரியவில்லை. எல்லோர் வீட்டிலும் இதை செய்வது உண்டா. நான் கேள்விப்பட்டதில்லை.

வாராவாரம் வெண்ணைய் வாங்கி நெய் காய்ச்சி, அதில் முருங்கை இலையோ அல்லது கருவேப்பிலையோ போட்டு, அதை எடுத்து ஓரம் போட்டு கசடாக வறுக்கின்ற வாணலியில் கோதுமை மாவை போட்டு பொன்னிறமாக வறுத்து அடுப்பிலிருந்து எடுத்து அதில் சர்க்கரை தூவி, அந்த சூட்டிலேயே ஒரு புரட்டு புரட்டி,எடுத்து உருண்டை உருண்டையாக பிடி கொழுக்கட்டையாக பிடித்து மூன்று, நான்கு உருண்டைகளைத் தட்டில் வைத்து கிழக்கு  பார்த்து உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறீர்களா. என் அம்மா செய்து தருவாள். மிக மிக சத்தான உணவு என்பது அவளுடைய அபிப்ராயம்.

என்னுடைய குழந்தைகள் போர்ன்விடாவும், பூஸ்ட்டும் இப்படி கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் ஸ்பூனாக அப்படியே சாப்பிடுவேன் என்று சொல்லியபடியே சாப்பிட்டார்கள். ஆனால் இந்த உணவு அவர்களுக்கு அவ்வளவு பிடித்தமாக இல்லை. மேலும் நெய் காய்ச்சுவது நின்று போயிற்று. மணல் மணலாக என்று கூறப்படும் நெய்யே கடையில் வாங்கி லேசாக ஊற்றிக் கொள்வது இயல்பாயிற்று. வளர வளர நெய் விலக்கப்பட்டது.

ஆனால் என் இளம் வயதில் அப்படி அல்ல. ரசம் சாதத்திற்கு நெய். அது விரல் இடுக்குகளிளெல்லாம் கொழுப்பாக ஒட்டிக்கொள்ளும். உள்ளங்கை குவித்து நீட்டினால் அதிலும் ஊற்றப்படும். நெய் உறிஞ்சு குடித்துதான் வளர்ந்தோம். வெண்ணைய் வாங்கி வருவது நான். எனவே, கூட எனக்கு ஒரு பிடி கோதுமை மாவு நெய், சர்க்கரை கலவை உண்டு. 

அம்மா என்றதும் பலபேருக்கு இதுபோல உணவுதான் ஞாபகம் வரும். கத்தரிக்காய் காராமணி கூட்டு, உருளைக்கிழங்கு முந்திரி பருப்பு பொடிமாஸ் என்று என் வீட்டிலும் அம்மாவின் உச்சகட்ட கை சாமர்த்தியம் நினைவு படுத்தப்படுவதுண்டு. ஆனால் அதைத் தவிரவும் பி.எஸ். சுலோச்சனா என்கிற அந்த தமிழ் பண்டிதை எனக்கு பல்வேறு உத்தமமான விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார். இன்று அதை நினைவுபடுத்துகையில் ஆச்சரியமாக இருக்கிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருபது வயது பாலகுமாரனை கண்ணின் மணியென அவள் காத்தது தெரிய வந்தது. இல்லையெனில் என் அப்பாவின் கொடுமை தாங்காது நான் செத்துப் போயிருப்பேன்.

‘ஏன் கணக்கு மார்க் கம்மி?‘

நான் பதில் சொல்வதற்குள் பிரம்பால் இருபது, இருபத்தைந்து அடிகள் விழுந்துவிடும். அதில் சில அடிகள் அம்மா வாங்கிக் கொள்வாள். எனக்கு கணக்கு என்றவுடன் பிரம்பும், பட்டை பட்டையான காயங்களும் தான் ஞாபகம் வரும். கணக்கு மனதில் பதியவே பதியாது. சாதாரண கூட்டு வட்டி கூட நான் குழப்புவேன். மற்ற பாடங்களிலும் கெட்டிக்காரன் அல்ல. அதிலும் சொதப்பல் தான். காரணம் அதீத கற்பனை வளம். நல்ல அப்பாவை கற்பனை செய்து கொள்வது மட்டுமல்லாது மாமன், மாமி, அத்தை, பாட்டி என்று சகலரோடும் ஒற்றுமையாக இருக்கின்ற ஒரு குடும்பத்தையும் நான் நினைத்துக் கொள்வேன்.

என் தகப்பனாருக்கு மனுஷாள் ஆகாது. அவன் அல்பன், இவன் பன்னாடை, இவன் பைத்தியம் என்று தன்னைத் தவிர மற்ற அனைவரையும் இழிவாகவே பேசுவார். அவரை இதைவிட இழிவாக மற்றவர்கள் பேசுகிறார்கள் என்பதை மரணபரியந்தமும் அறியாது இருந்தார்.

ஆனால் அம்மா அப்படி அல்ல.

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் யாம் எந்தையும் உடையேம். எம் குன்றும் பிறர் கொள்ளார்.

ஒன்றரை மணி நேரம் பேசுவாள். எவ்வளவு சுபாவமா அமைஞ்சுருக்கு பார். போன வாரம் என் தம்பி வந்தான்னு நான் பேசுவேனோன்னு அந்த மாதிரி. போன பௌர்ணமில எங்க அப்பா இருந்தார். இந்த பௌர்ணமில அப்பா இல்லை. என்ன ஆச்சு. வென்றி எறி முரசு வேந்தர் எம் குன்றும் கொண்டார். என்ன அர்த்தம் இதுக்கு. அவளுக்கு போர் என்ற உடனே குதிரையோ, கத்தியோ, ரத்தமோ, தலை சீவப்பட்டதோ, குடல் வெளியே வந்ததோ ஞாபகம் வரவில்லை. தூரத்திலே ரொம்ப தூரத்தில திபு திபு திபு திபு திங்புன்னு முரசு அடிக்கிற சத்தம் கேட்டது.

வெண் எறி முரசு வேந்தர். எல்லோரும் வந்திருக்கா. மூணு பேர் வந்திருக்கா. அப்படின்னு கூச்சல், குழப்பம். எம் குன்றும் கொண்டார். யாம் எந்தையும் இலமே.

பாரி செத்துப் போயிட்டான்னு. அழுகையா சொல்லலை. அழாம சொல்லலை. அதான் இந்தக் கவிதையோட சிறப்பு. போன பௌர்ணமிக்கும் இந்த பௌர்ணமிக்கும் நடுவிலே ஒரு மாச கேப்.என் னென்னமோ நடந்து போச்சு. அம்மா பேசிக் கொண்டே போவாள்.

நான் அதிர்ந்தபடி அவளை பார்த்துக் கொண்டிருப்பேன். என் மனதுள்ளும் தொலைதூர முரசு கேட்டுக் கொண்டிருக்கும்.

மனசுல இந்த கவிதையால ஒரு ட்ராயிங் கிடைக்குது இல்ல.அம்மா தமிழும், ஆங்கிலமும் கலந்து பேசுவாள். அவளுக்கு ஆங்கிலம் வேகமாக பேசவேண்டும் என்று ஆசை. ஆனால் ஒருமாதிரி அழுத்தம் திருத்தமாகப் பேசுவாள். தமிழின் சரளம் ஆங்கிலத்தில் குறைவு. பேசி பழக்கமின்மை தான் காரணம்.

பண்டிதை அதனால் கவிதை சொல்லிக் கொடுத்திருக்கிறாள் என்று எனக்கும் தோன்றியது உண்டு.

கணக்கு வரல, மனசு புரிஞ்சு படிக்க முடியலை இதுக்கெல்லாம் வருத்தப்படாதே. மெல்ல ஒவ்வொரு க்ளாஸா பாஸ் படிச்சுட்டு வந்துடு. நன்னா படிச்சுட்டு பசிக்கு பஞ்சு மிட்டாய் வாங்கித் திங்கறவனெல்லாம் எனக்குத் தெரியும். பணம் சம்பாதிக்க படிப்பு முக்கியமில்லை. நல்லவனா இருக்க படிப்பு முக்கியமில்லை. கடவுள் பக்தி முக்கியம். கேள் கிடைக்கும். நீ ஏன் கணக்கு பாடம், இங்கிலீஷ், சயின்ஸ்சுன்னு கேட்கற. நான் நன்னா சம்பாதிக்கணும், சௌக்கியமா இருக்கணும் அப்படி கேளேன். எந்த அம்மா இவ்விதம் சொல்லித் தருவார் என்று எனக்குத் தெரியலை.

என் க்ளாஸ்ல ஒரு பொண்ணு இருக்குடா. வைதேகின்னு பேரு. வீட்ல ஏதோ பிரச்சனை. பாதி நாள் அழுத மூஞ்சியாதான் வரும். மத்தியானம் சாப்பிடாம படுத்துக்கும். படிப்பு சுமார்தான். ஆனா அவ மக்கு இல்ல. உயிர் உருகுற மாதிரி பாடறா.

அந்த கிறிஸ்துவ பள்ளிக் கூடத்துல ஓரமா நின்னு ப்ரோவர அப்படின்னு பாடுவோ. அந்த டீச்சர்ஸ்க்கு ஒன்னும் தெரியாது. ஆனாலும் இந்த பாட்டு என்னவோ பண்றதே அப்படின்னு சொல்லுவாங்க. மத்த குழந்தைகளுக்கு அதிகம் வாய்ப்பு கொடுத்து இவளுக்கு ஒரே ஒரு பாட்டுக்குத்தான் வாய்ப்பு தருவாங்க. ரொம்ப ஹிண்டு பாட்டு பாடறா அப்படின்னு. ஆனா அந்த ஒரு பாட்டுலேயே க்ளாப்ஸ் அள்ளிண்டு போயிடுவோ.

நான் அவளை கூப்பிட்டு சொன்னேன். உங்கிட்ட ஒரு நல்ல வித்தை இருக்கு. கவலைப்படாதே அது காப்பாத்தும்னு. அவளை காப்பாத்திடுச்சு. இன்னைக்கு சௌக்கியமா இருக்கா. அவ பாட்டுக்காகவே ஒருத்தன் கல்யாணம் பண்ணிண்டு ரொம்ப உன்னதமான இடத்துல வைச்சிருக்கான். ரொம்ப நன்னா படிச்ச பொண்ணுங்கள்ளாம் டீச்சரா, சாக்பீஸ் மூஞ்சியோட வர்றா. சின்னப் பசங்களை பார்த்து கத்திண்டு இருக்கா.

டேய் நீ என் க்ளாஸ்க்கு வர்றியா என்று ஆவலாக ஒருநாள் கூப்பிட்டாள். இராமாயணம் மூணு செய்யுள் பாடம். ஆனா நான் மொத்த இராமாயணமும் சொல்லப் போறேன். குழந்தைகள் எகிறி எகிறி கேட்கறா. சொல்லுங்கோ சொல்லுங்கோன்னு. நான் எப்படி சொல்றேன்னு வந்து பார்க்கிறயா.

எனக்குத் தனியாக ஒரு பெஞ்ச் கிடைத்தது. பருவப் பெண்கள் இருக்கின்ற பத்தாம் வகுப்பு அது. என்னையும் அனுமதி கேட்டு அமர்த்தினார்.

மரமே சீதையை பார்த்தியா, கொடியே சீதையை பார்த்தியா, அன்னமே சீதையை பார்த்தியா, மானே சீதையை பார்த்தியா அப்படின்னு ராமர் அழுது அழுது புலம்பும் போது அந்தக் குழந்தைகள் அழுதார்கள். எனக்கும் கண்ணீர் முட்டிற்று.

இப்படி கதை சொல்லுகின்ற உபன்யாசகராக ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. நானும், அம்மாவும் பாலகிருஷ்ண சாஸ்திரிகளுடைய உபன்யாசத்திற்குப் போவோம். இராமாயணம், மகாபாரதம் மட்டுமல்ல, தியாகராஜ இராமாயணம் என்று ஒன்று சங்கீதத்துடன் மனமுருக அவர் பாடுவார். நாங்கள் கன்னத்தில் நீர்வழிய கேட்டுக் கொண்டிருப்போம். நன்னு பாலிம்ப நடசி ஒச்சிதிவோ.

ஊட்டி, கொடைக்கானல் வெளியூர் பயணங்கள் இவை யெல்லாம் நான் போனதில்லை. போக என் தகப்பனார் அனுமதித்ததில்லை. அடுத்த வீட்டிற்கும் எங்கள் வீட்டிற்கும் சண்டை. என் தகப்பன்தான் காரணம். அவர்கள் வீட்டில் சிரித்து பேசுவது இவருக்கு பிடிக்கவில்லை. விருந்தினர் வருவது இவருக்கு விருப்பமில்லை. வீண் வம்பு இழுத்தார். பிரச்சனை பெரிசாகியது. மத்தியஸ்தர்கள் வந்து விசாரித்தார்கள்.

நான் யோசித்தேன். அப்பா பக்கம் தான் தவறு இருக்கிறது. அவருக்கு எதனால் பிடிக்கவில்லை என்று சொன்னேன். என் அம்மா திகைத்தாள். என்னடா…என்பது போல் பார்த்தாள். மத்தியஸ்தர்கள் தட்டிக் கொடுத்தார்கள். அடுத்த வீட்டு கிழவர் அருகே கூப்பிட்டு அணைத்துக் கொண்டு இது போறும்டா. நீ சௌக்கியமா இருப்பே என்றார்.

ஆனால் எப்படி சௌக்கியமாக இருக்க முடியும். கிழவர் வாக்கு பலிக்கவில்லை. அடி பின்னி எடுத்தார். குழந்தைகிட்ட பொய் சொல்லுன்னா சொல்ல முடியுமா. அவன் அப்படித்தான் சொல்லுவான். அவனை சாட்சியா வைச்சுண்டா சண்டை போடறது என்று அம்மா சொல்ல, அவளுக்கும் நாலு அறை விழுந்தது. நீ ஏம்மா இதுல தலையிடற. நான் பாட்டுக்கு அடி வாங்கிட்டு போறேன். போடா, எனக்கும் மரத்து போயிடுத்து என்று அம்மா சொன்னது இன்னும் காதில் இருக்கிறது.

ஏதோ ஒரு சினிமாவில் மரத்துப் போய்விட்டது என்பது வேறு ஏதோ அர்த்தத்தில் வரும். ஆனால் அடி, உதையில் ஏற்பட்ட வலிகள் உறைக்கவேயில்லை என்று அம்மா சொன்னது ஒரு மகனுக்கு மிகப் பெரிய காயம்.

ஒரு வாடகை பியட் காரில் முன்பக்கம் நான் அமர்ந்திருக்க,பின்பக்கம் என் தாயும், தங்கையும் அமர்ந்திருக்க யாரோ ஒருவர் வீட்டிற்குப் போனோம். பஸ்ஸில் போக வேண்டாம் என்று சம்பாதிக்கிற ஜோரில் நான்தான் அம்மாவை டாக்ஸியில் கூட்டிக் கொண்டு போனேன்.

நான் முன் சீட்டில் கோணலாக உட்கார்ந்து வலது கையை டிரைவர் சீட்டுக்கு பின் பக்கம் போட்டு பேசிக் கொண்டு வருவதைப் பார்த்து அம்மாவிற்கு ரொம்ப சந்தோஷம்.

இறங்கியதும் நீ ஸ்டைலா உட்கார்ந்தது ரொம்ப நன்னாயிருக்கு. நீ பையன் இல்லைடா. ஆம்பளை மாதிரிதான் இருக்கே. எனக்குத்தான் குழந்தையா தோண்றதே தவிர உன்னை அந்த டாக்ஸி டிரைவர் சார் சார்னுதானே கூப்பிடறான். அதுவே எனக்குச் சந்தோஷமா இருக்கு. ஏன் சரஸ்வதி உம்மேல இவ்வளவு ஆசைப்படறா. எனக்குப் புரியலையா. நன்னா தெரியறது. ஆனா உங்க அப்பாவை வைச்சுண்டு யார் வீட்டுக்கும் போய் சம்பந்தம் கேட்க முடியாது. எந்த விஷயமும் பேச முடியாது.

சந்தோஷமும், துக்கமும் ஒரே நேரத்தில் அவளிடமிருந்து வெளிவந்தன.

தீபாவளிக்கு பட்டுப் புடவை வேண்டுமென்று ஆசைப்படுவாள். எனக்கு வந்த போனஸை அப்படியே அவளிடம் கொடுத்து பட்டுப் புடவை வாங்கிக் கொள் என்று சொல்வேன். கடைக்கு அழைத்துப் போவாள். எது தனக்கு சரியாக இருக்கும் என்று தேர்ந்தெடுக்கச் சொல்வாள். அவளே தேர்ந்தெடுப்பது கொஞ்சம் முகத்தில் அடிக்கிற கலராக இருக்கும். எண்ணூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் என்று நல்ல புடவைகளின் விலை இருந்தது. நான் ஆயிரத்து முன்னூறு ரூபாய்க்கு நல்ல சரிகை போட்டு விலை உயர்ந்ததாய் வாங்கினேன். அத்தனை சந்தோஷம்.

இந்த கலர் எனக்கு சரியா இருக்கும்ங்கற. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. நான் அதையே எடுத்துக்கறேனே. அது வழக்கம் மா. அந்த மாதிரி எத்தனை புடவை இருக்கு உனக்கு. எல்லோரும் கட்டிக்கிற கலர் அது. இது ரொம்ப ஜோரா இருக்கும்.

வெளீரா இருக்கா. அதான்மா உன்னை யங்கா காமிக்கும். அந்த வெளீர் நீலக் கலர் தீபாவளி அன்று கட்டிக் கொண்டு முன்னும் பின்னும் அலைந்த போது அந்த ஒண்டிகுடித்தனத்தில் பாராட்டு கொட்டியது. ஆனால் தானே எடுத்ததாகச் சொன்னாளே தவிர என்பெயரைச் சொல்லவில்லை. அதில் எனக்கு சந்தோஷம் இருந்தது. ஆனால் மத்தாப்புக்கு நடுவே ரொம்ப தேங்ஸ் என்று சொன்னதும் சந்தோஷமாக இருந்தது. நிறைய சம்பாதித்து நிறைய பட்டுப் புடவை வாங்கணும் என்று தோன்றியது.

‘நான் ஒன்னு தீர்மானம் பண்ணியிருக்கேன்.’

‘என்னம்மா?’

‘நீயோ நன்னா சம்பாதிக்கற. இனிமே பட்டுப் புடவை தவிர வேற ஒன்னும் உடுத்தறது இல்லைன்னு வைச்சிருக்கேன்.’

‘வெரிகுட். அப்படியே பண்ணலாம்மா.’

‘கடைக்கண்ணிக்கு போறதுக்கு கூட பட்டுப் புடவையில தான் போகப் போறேன்.’

‘அப்படிதான்மா இருக்கணும்.’

பட்டுப் புடவை கட்டிக்கிட்டு சைக்கிள் ரிக்ஷால வருவாங்களே, அந்த அம்மாவா என்கிற பெயர்நிலைத்துப் போயிற்று. நான் அடி வாங்குவது நின்று போயிற்று. ஆனால் அப்பாவின் சீற்றம் குறையவில்லை.

சட்டென்று இருதயகோளாறில் அவஸ்தைப்பட, மேல் சச்சு வாங்க, இறந்து போய்விடுவார் என்று பயப்பட அவர்மீது வியர்வை கொப்பளித்து ஊற்ற, நான் துரிதமாக செயல்பட்டு எனக்குத் தெரிந்த ஒரு டாக்டரை கெஞ்சி கூத்தாடி ஸ்கூட்டரில் அழைத்து வந்தேன். நடுநிசியில் அந்தக் காலனி விழித்துக் கொண்டது

என் அப்பாவை டாக்டர் சோதித்து விட்டு, ஒன்றும் இல்லை. சாப்பிட்ட விஷயம் ஏதோ தவறு. உப்பசம். இருதயத்தில் கோளாறு இல்லை. நாடித் துடிப்பும், இரத்த அழுத்தமும் சரியான அளவில் இருக்கின்றன. வயிறை சரி செய்து கொள்ளச் சொல். ஒரு மலம் இளக்கி எடுத்துக் கொள்ளச் சொல் என்று அரை மாத்திரை கொடுக்க, இரண்டு மணி நேரம் கழித்து அவர் வயிறு சுத்தமாக, அமைதியானார்.

அப்பாவிற்கு நன்றியெல்லாம் சொல்லத் தெரியாது. என்னுடைய கல்யாணத்தில் அப்பா ரவுசு செய்தார். திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று முறைத்தார். சத்திரத்தில் ஒரு தனி அறையில் உட்கார்ந்து கொண்டு கீழே வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். அம்மா, என் தம்பியை உட்கார வைத்து விடுகிறேன். நீ கவலைப்படாதேடா. வந்தா வரட்டும் வராவிட்டால் போகட்டும் என்று சிடுசிடுத்தாள். 

ஆனால் அப்பா வராமல் போவது அம்மாவிற்கு அவமரியாதை என்று எனக்குப் புரிந்தது. நான் கெஞ்சி கூத்தாடி வரவழைத்தேன். வேண்டா வெறுப்பாக வந்து உட்கார்ந்து கொண்டு விரத சடங்குகளை முடித்து விட்டு மறுபடி விலகி உட்கார்ந்தார்.

ஆம்படையானால அவஸ்தை பட்டாச்சு. மருமகளாலேயும்நான் அவஸ்தைப்படணுமா. கமலா நல்ல குழந்தையா இருக்கா.அவளை கல்யாணம் பண்ணிக்கிறயா என்று கெஞ்சுவது போல்கேட்க, நீ யாரை சொல்றியோ கல்யாணம் பண்ணிக்கிறேன்.எ ன்று சொன்னேன்.

கமலா குழந்தையிலும் குழந்தை. அம்மா அவளுக்கு விஷயங்களை அழகாக சொல்லிக் கொடுக்கத் துவங்கினாள். இப்படி யாரும் எனக்கு சொல்லிக் கொடுக்கலை மாமி. நான் எங்கேயோ தாத்தா வீட்டுல அனாதை மாதிரி வளர்ந்தேன். இப்படி பாத்து பாத்து சொல்லிக் கொடுக்க எனக்கு மனுஷாளே இல்ல கமலா அழ, அம்மா நெகிழ்ந்து போனாள்.

மருமகளுக்கும் மாமியாருக்கும் அவ்வளவு ஒட்டுதல். அத்தனை பிரியம். மிக நெருங்கிய தோழிகள். ஆனால் எனக்குத் தான் கவிதை சொல்ல ஆளே இல்லாத ஒரு கஷ்டம் இருந்தது. என் கதையை படித்து விமர்சனம் செய்யாத மனைவி இருப்பது சிரமமாக இருந்தது.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு நான் சாந்தாவை நேசித்த போது, அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய போது அம்மா எதிர்க்கவில்லை. ஆதரிக்கவில்லை. உனக்கு உதவி குறையறது. எனக்கு புரியறது. சாதம் போட்டா போறுமா. போறாது. உன்னை மாதிரி மனுஷாளுக்கெல்லாம் எல்லாத் துலேயும் பங்கு எடுத்துக்கற பொம்மனாட்டி வேணும். ஆனா கமலா குழந்தைடா. அவளை கஷ்டப்படுத்திடாதே என்று பொதுப்படையாகச் சொன்னாள். கமலா தவித்த போது அவளுக்கு ஆறுதல் வார்த்தை சொன்னாள்.

சாந்தா உள்ளே நுழைந்து கமலாவிற்கு உறுதி கொடுத்த போது கொஞ்சம் சமாதானமானாள். கமலாவை ஊர் விமர்சித்தபோது எங்கள் வீடு அணைத்துக் கொண்டு தாங்கியது. கூடுதலான முக்கியத்துவம் கொடுத்தது. இரண்டு பேருக்கும் ஒற்றுமை வர, ஒரு வருடம் ஆயிற்று.

நான் மறிச்சு தடுத்திருக்க முடியும். தடுத்தா கேட்டிருப்பான். ஆனால் செத்துப் போயிடுவான். எனக்கு என் புள்ள முக்கியம் இல்லையா. அவனை சாகடிப்பாளா. எனக்காக அவன் உன்னை கல்யாணம் பண்ணிண்டான். தெரியும். அவனுக்குன்னு ஒன்னு கேட்கறான். தப்பா

இதெல்லாம் மிகப் பெரிய வார்த்தைகள். பெண்ணியவாதிகளிடம் இது சிக்கிக் கொண்டால் பிய்த்து எறிந்து விடுவார்கள். ஆனால் என் வாழ்க்கையில் காயத்திற்கு போட்ட களிம்பாக இவை இருந்தன.

ஒரே ஒரு மீகாமன் சரியாக இருந்திருந்தால் எங்கள் குடும்ப படகு இன்னும் அற்புதமாக சவாரி செய்திருக்கும். குசும்பும், கொடூரமும் கொண்ட தகப்பனார். எனவே அது பாறையில் மோதிற்று. அம்மா சிறு படகாக இருந்து காப்பாற்றினாள்.

‘நான் படிக்காம மேனவல்ஸ்கிரிப்ட் பத்திரிகைக்கு கொடுத்தா எனக்கு கோவம் வரும். நான் படிச்சுட்டுத்தான்…’ என்று கூச்சலாய் பேசுவாள். நான் தாமதமானாலும் பரவாயில்லை என்று அவள் படிப்பதற்காக காத்திருந்து கொடுத்து விட்டு அவளுடைய அபிப்ராயத்தை கேட்டுவிட்டு அனுப்புவேன்.

ஒருமுறை அவள் சொன்னதை கேட்கவில்லை. உடனே அந்த இடம் தவறு என்று ஆனந்தவிகடனுக்கு கடிதம் எழுதினாள். என் தங்கை அப்படி செய்யக் கூடாது என்று சொன்ன போது ஒரு ரீடரா நான் அந்தக் கதையை மறுக்கறேன் என்று கர்வம் பொங்கச் சொன்னாள். என்னடா நான் பண்ணது தப்பா என்று கேட்டாள்.

நீ என்ன பண்ணாலும் நான் உன்கூட இருப்பேன். உனக்கு எதிரா பேசமாட்டேன் என்று பதில் சொல்லி சிரித்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து வந்து, தப்பு பண்ணிட்டேனோ, நீ என்ன சொன்னாலும் சரின்னு சொல்லியிருக்கணுமோ. என்று வர, நான் அவளை அணைத்துக் கொண்டேன். ஐயம் சாரிடா. லெட்டர் போயிடுத்தே. எதுவும் கேட்கலையா.

இல்லை. என்னவேணா என்னவேணா பண்ணிக்கட்டும். பத்திரிகை எதுவேணாலும் செய்யும் என்று பதில் சொன்னேன். ஆனால் ஆனந்த விகடன் ஆசிரியர் உத்தமமானவர். உங்க அம்மா கோவிச்சுண்டு லெட்டர் எழுதியிருக்கா. ஜாக்கிரதை. அம்மாவை கஷ்டப்படுத்தாதே என்று ஒரே ஒரு வரியில் அந்த விஷயத்தை முடித்து விட்டார்.

அவளைச் சுற்றி அவளிடம் படித்து கொம்பாகி விட்ட மாணவிகள் பலபேர் இருந்தார்கள். அதில் அவளுக்கு மிகுந்த கர்வம் உண்டு.

 ஆனால் நான் வளர வளர என்னைச் சுற்றி ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருப்பதை பார்த்து, இத்தனை பேர் உன்னை படிக்கறாளா என்று ஆச்சரியப்பட்டாள்.ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு கிடைத்தது. நான் பரிசு வாங்கி கீழே இறங்கி அம்மாவிடம் கொடுத்தேன். மறுபடியும் போய் மேடையில் அமர்ந்து கொண்டேன். இது பற்றி இரண்டு, மூன்று பேச்சாளர்கள் பாராட்டி பேசினார்கள்.

அம்மாவிற்கு மிகப் பெரிய சந்தோஷம். நீ பாடற பாட்டு பலிச்சுடுத்து. மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் பலிச்சுடுத்து என்று அழுதார்.

இவ்வளவு அந்தரங்கமான விஷயங்களை எழுத வேண்டுமா என்று என் நண்பர்கள் சிலர் கேட்பார்கள். எனக்கு அந்தரங்கம் என்று எதுவும் இல்லை. மறைக்கும்படியாக நான் செய்ததைக் கூட நாவலாக்கியிருக்கிறேன். இங்கு எழுதுவதற்குக் கூட தகுந்த காரணம் இருக்கிறது. இதை படிக்கின்ற பெண்கள் தங்கள் மகனுக்கு நெருங்கிய தோழியாய், வழிகாட்டியாய், நல்ல ஆசிரியையாய் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதுகிறேன்.

என் அம்மா நல்ல தோழி. சிறந்த வழிகாட்டி. நல்லாசிரியை. அவளைப் பற்றி சொல்வதில் என்ன தவறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *