You are drilled deep down
There is no way to find or lose
you exist, in the ashes and bones
whats the point? still,
my arteries are your hair pins
lips coloured from my red
Strokes beholding your eyes
Made from the darkest shade of my night
I am crushed enough
Go ahead, Just leave
There is no way
To find or Lose.
என்றோ எங்கோ முதல் காதலுக்கு எழுதிய ஆங்கிலக் கவிதை அலமாரி துடைக்கும்போது முகத்தில் பறந்து வந்து விழுந்தது. யாருக்கும் தெரியாமல் இரண்டு மூன்று முறை மறுபடி மறுபடி படிக்க, சில பல வருடங்களாக வராத சிரிப்பு இதழின் ஓரமாக ஒட்டிக்கொண்டது. மீண்டும், மீண்டும் படிக்க சிறுவயதின் ஆராவாரம் புரிந்தது, பிழைகள் கொக்கரிக்கவைத்தது. ஒரு காலத்தில் மனது வலித்து உருக்கத்தின் உச்சியை தொட்ட காதல் கவிதை இன்று கேலியாக பட்டது. அசட்டுத்தனமாக நினைத்ததாலோ, அறையை கடந்து செல்லும் மனைவியின் பொருமலோ கவிதையை சடக்கென்று கசக்கி குப்பை தொட்டியில் தூக்கி எறியவைத்தது. விட்டெறிந்து கடக்க மனதும் குப்பை தொட்டியிலேயே கிடந்தது.
ராம் எழுதிய ஒரே ஆங்கிலக் கவிதையும் இதுவே. எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. எழுதும் காலகட்டத்தில் ராமின் காலைகள் என்றுமே கவிதைக்கு சொந்தம். அலாரத்திற்கு எழுந்த கையுடன் மனது கவிதைக்குள் போகத்துவங்கும். அன்றைய நாளின் சந்தோஷமும், கொடூரமும் மனதில் எழும் வரிகளே முடிவு செய்துகொள்ளும். கல்யாணம் ஆன பிறகு அந்த பழக்கம் மொத்தமாக அறுந்து போனது. குழந்தை பிறந்த பிறகு கார்டூன் வரிகளே கதி என்றானது.
பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்த மகன் டி.வியில் ஒரு பயமறியா சிறுவனின் அதிகப்ரஸங்கித்தனத்தை வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான். தூரமாக புலம்பிக்கொண்டிருக்கும் மனைவியின் பேச்சு அடிமனதில் எங்கோ உறுத்திக்கொண்டே இருந்தது. இல்லறத்து கவனச்சிதரல்களுக்கு நடுவே “ There is no way to find or Lose” என்கிற வாக்கியம் மட்டும் காலை உணவுக்கு நடுவே முனுமுனுத்துக்கொண்டிருந்தது. மனதின் ஓரத்தில் அறுந்த ஊஞ்சலாய் தொங்கிக்கொண்டிருந்தது. இவனுக்கு மட்டுமே பரிச்சயமான ஒரு அழகு அதில் தென்பட்டது. தமிழில் சரியாக மொழி பெயர்க்க முடியவில்லை. இரண்டு மூன்று முறை முயற்சித்து தவறாகவே வார்த்தை விழுந்தது. வேறு யாரிடமாவது கேட்கவேண்டும். யாரிடம் கேட்பது? என்ன என்று சொல்லி கேட்பது?
மனது தொலைவிலிருக்கும் அந்த குப்பை தொட்டியின் ஓரத்தையே பார்த்துகொண்டிருந்தது. பணிப்பெண்ணின் கைவண்ணத்தில் பக்கத்து அறையின் முக்கியக் குப்பைகள் அனைத்தும் ஒன்று சேர்த்து தொட்டியில் வந்து விழந்தது.
பேன்சீப்பால் வரக் வரக்கென்று வாரி கால்விரல்களின் இடுக்கில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சுருள் முடி, கேரட் வாழைப்பழத் தோல், அழுத்தி தரை துடைத்தெரிந்த பழைய நியூஸ் பேப்பர், காலி மருந்து பாட்டில்களுக்கு நடுவே காதல் கவிதையையும் சுமந்தபடி குப்பைத் தொட்டி நிரம்பி வழிந்தது. ஓடிச் சென்று அனைத்தயும் வெளியே கொட்டி அந்த கவிதைய பத்திரப்படுத்திவைக்கவேண்டும் என்று மனதிற்குள் வெவ்வேறு குரல்களாக ஒலித்துக்கொண்டே இருக்க, மீண்டும் கவனச் சிதரல், இந்த முறை தோசையால் ஏற்பட்டது.
வாழ்கையின் மிகக் கொடூரமான விஷயங்களில் ஒன்று மனைவியின் அக்கறையற்ற தோசை. தடிமனாக, வெந்தும் வேகாமல், எண்ணையின்றி, கடனே என்று ஆரிப்போன புளிப்பு தோசை.
இரண்டு தோசை போறும். காலைல எவ்ளோ சாப்டுவீங்க என்று தட்டின் நடுவே இடம் பார்த்து சரியாக சாம்பாரில் வந்து விழ, லேசாக தெரித்து பூ போட்ட சட்டையில் அழுகையாக கசிந்து கொண்டிருந்தது. நகத்தால் கீறி துடைத்தெரிய சட்டைப் பூக்கள் கற்பிழந்தவளைப்போல் நெற்றிகலைந்து காணப்பட்டது. சட்டையா முக்கியம், சட்டை போனா போகுது நினைவுகள் திரும்ப வருமா என்று நிமிர்ந்து பார்க்க வேலைப்பெண் அந்த குப்பைத் தொட்டியை ஒரு இடுப்புயர கருப்புக்கவரில் கவிழ்த்தாள். அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து ஒரு பேப்பர் மட்டும் பாலித்தீன் ஒரத்தில் தத்தித்தடுமாறி புதிதாக ரெக்கை முளைத்த பறவையாய் அறை அடி பறந்து வெளியே விழுந்தது.
கண்டிப்பாக அதுதான். காலத்தைக் குறிக்கும் பழுப்பு நிறம். பேனாவின் அழுத்தம் பின் பக்கம் வரை தெரியும் கையெழுத்து, காதோரத்தின் ஸ்டேப்ளர் கிழிசல், க்ரீஸ் கலையாத செவ்வக மடிப்பு, தன் கண்ணுக்கு மட்டும் தெரியும் காதல் சின்னம். நிச்சயமாக அதுவேதான். வெறும் 4 அடி இடைவெளி மட்டுமே. எட்டிப்பிடித்தால் ஒன்றரை வினாடிகளில் பழைய காதல் உள்ளங்கையில் அண்டிக்கொள்ளும். சுகமாக கலந்துகொள்ளும். மாநகராட்சி குப்பைத்தொட்டியில் சீரழிந்து வேளச்சேரி கிடங்கில் ஏரிந்து சாம்பலாகாமல் காப்பாற்றப்படும். இன்னும் கொஞ்சம் காலம் வாழும்.
ராம் ஒரு அரிசி மூட்டையைப் போல் அங்கு நின்று கொண்டிருந்தான். மனைவியைத் தாண்டிச் சென்று பழைய காதலை கையில் எடுக்க தைரியமில்லாமல் நடுநிலை வயோதிகனாக வாஷ்பேசின் தண்ணீரை வீணடித்துக்கொண்டிருந்தான்.
பணிப்பெண் மிகுந்த அக்கறையுடன் அதை கையால் எடுத்து முழுவதுமாக கசக்கி பைக்குள் தினித்தாள். அதன் மேல் நேற்றைய சாம்பார் வாளியை கவிழ்த்தாள், வீடு துடைத்து கூட்டின மண் குப்பையை மேலும் கொட்டினாள். காதல் கவிதையின் நிலை வேளச்சேரி குப்பைக்கிடங்கைவிட இன்னும் மோசமான ஒரு சூழலில் சிக்கிக்கொண்டது.
சாப்பாடு ஹாட்பேக்குல வச்சிருக்கேன். வேலைக்கு போனோமா வந்தோமானு இருங்க, போற வழியெல்லாம் எதாச்சும் யோசிச்சிட்டு, ஆஃபீஸ்ல போய் பேனாவும் கையுமா உக்காறாதீங்க. வேலைய மட்டும் பாத்துட்டு கிளம்பினா யாருகிட்டையும் பல்லகாட்டிட்டு நிக்க வேண்டிய அவசியமில்ல என்று பாத்ரூம் கதவருகே நின்று நங்கென்று கதவு சாத்திச்சென்றாள். எல்லா மனைவிகளுக்கும் வாழ்கையின் மிக முக்கியமான விஷயங்களை வேலைக்கு கிள்மபுவதற்குமுன் ஏதோ ஒரு கதவருகே, கிடுக்கில் நின்று சொல்லுவதே வழக்கம். கலாச்சாரம்.
சரியாக எழே முக்காலுக்கு நாள் தவறாமல் வாசற்கதவின் மேல் இருக்கும் பொய்க்குயில் ஒன்று முனகும். அன்றைக்கு ஏதோ லூஸ் காண்டாக்ட் போலும். ராகம் குழைந்து குழைந்து பொங்கல் தின்றவளாய் கூவியது காலிங்பெல். மகனின் பள்ளி வண்டி வந்ததாக அர்த்தம்.
அவசரத்திற்கு ஆதரவாக நடக்காத குழந்தையை இடுப்பில் தூக்கி நடக்க சட்டை ஒரு பக்கமாக கசங்கியது. லஞ்ச் பேக், வாட்டர் பாட்டில், ஆஃபீஸ் பை என்று எழு கைகள் கொண்டு நாற்பத்திரெண்டு படிக்கட்டுகள் இறங்குவதற்குள் பதிமுன்று முறை ஹாரன் அடித்தாகிவிட்டது. முன் சீட்டும் இல்லாமல் பின் சீட்டும் இல்லாமல் எங்கள் மனநிலைபோல் நடுவாந்திரமாக ஒரு இடத்தில் உட்காரவைக்க அருகே அமர்ந்திருந்த சந்தனமிட்ட குட்டிப்பெண் சிரித்தபடி தன் மகனுக்கு ஹைஃபை கொடுத்தாள். புருவங்கள் சுருங்க சற்று யோசித்து மகனை மீண்டும் கொத்துமல்லியாக தூக்கி, இடம் மாற்றி ஆண் ஸ்னேகிதத்துடன் உட்கார வைத்து படி இறங்கி டாட்டா காண்பிக்க, காதல் பாடல் ஒன்று சத்தம் கூடுதலாக ஒலிக்க ஆரம்பித்து வண்டி கிளம்பியது.
சடாரென்று எண்ணெய் டின்னை கொட்டியது போல் டூ வீலர் ஸ்டார்ட் ஆனது. முதல் சிக்னலிலேயே வாசனை சோப்பால் முகம் கழுவியது அர்த்தமற்றுப் போனது. கழுத்துப் பவுடர் கருப்பாய் மாறியது. புழுதிக்காற்று மேல் உதட்டை உப்பு கரிக்க வைத்தது. காதோரம் அடங்காமல் முளைத்த புது கிருதா ஹெல்மெட்டின் பஞ்சுகளுடன் சேர்ந்து குறுகுறுத்தது. முதுகுத்தண்டில் வழியும் வியர்வையும், பெரியமரத்து நிழற்பாதையும் சந்திக்கும்போது மட்டும் நிம்மதி. சந்தோஷம் தரக்கூடிய வியர்வைத்துளிகள் சிலதே. அதில் காமமும் ஒன்று.
எல்லாமே முதல் என்பதால் எதுவுமே மறக்க முடியாமல் வடுவாக மாறின. தோல்வியில் முடிந்த காதலை எது மறக்கடித்தது? ஏன் மறக்கத் தோன்றியது? பிரிந்ததாலா? காலத்தாலா? மனைவியாலா? இல்லையே இன்னும் மறக்க முடியவில்லையே. நினைக்க நினைக்க கழுத்தோரம் இன்னும் சில்லிடுகிறதே. தோள் சாய்ந்து அழுது பேசியது நினைவுக்கு வருகிறதே. பதிலுக்கு பதில் கவிதையாக எழுதியவைகள் இன்னும் என் இல்லறத்தின் அலமாரிகளில் ஒளிந்து கொண்டு, அவ்வப்போது முகத்தில் வந்து விழுகிறதே. எத்தனை எழுதினோம். எவ்வளவு பரிமாற்றங்கள். விரல் ஒடிய எழுதிய நாட்கள் இங்க் தீர்ந்த பேனாவைப்போல் எப்படி காணாமல் போகும்? க்ளர்க்கு உத்தியோகம் முக்கியம் என்று எப்படி துடைத்தெரிய முடிந்தது. காதல் போனதாலா? கவிதைகளும் எழுத்துக்களும் அதைச் சார்ந்ததாலா? அங்கிருந்து உதித்தது அதோடே உடைந்தும் போனது. எங்கிருந்து வந்ததோ அதே எடுத்துக்கொண்டும் போனது. மறக்க நினைத்த முயற்சியில் அடிமனதில் இருந்தவைகளை பிடிங்கி எறிய எழுத்துக்களும் பேனாக்களும் உடன்கட்டை ஏரியது. போ, போய் நாலனா காசுக்கு நாய் மாதிரி யெஸ் சார் நோ சார் சொல்லிட்டு கிட என்று உயிரெழுத்துக்கள் சபித்துவிட்டுச் சென்றன. அதனால் மனந்தவள் மீது காதலும் இல்லை கவிதையும் வரவில்லை. உயிர் இருக்கும் வரை வாழும் கடன். எழுத்துவடிவமாகவோ எடுத்துக்காட்டாகவோ கூட எங்கும் புதையவில்லை. ஆணை ஆசை மூட்டதெரியாத ஒரு பொம்மையை மனந்தது தவறு. இங்கு செல் அது என்ன? இவன் யார், அந்த ராஜா யார்? ஏன் இந்தக் கோவில் அழிந்து போனது? ஏன் இந்த கடற்கறை இத்தனை நீளம்? முட்டல் முனகல் ஒன்றுமில்லை. நில் என்றால் நிற்கும், சில சமயம் நில் என்றால் வேண்டுமென்றே உட்காரும். கடன். உ
அக்கடா என்று ஆஃபீஸ் நாற்காலியில் சாய, ராமின் அன்றைய வேலைகள் நினைவுக்கு வந்தது. கவிதையாவது காத்தாடியாவது. கண்முன் வைக்கப்பட்ட ஃபைல்கள் மதியம் முன்பு மேஜை தாண்டவில்லையென்றால் மரியாதை தேயும். சற்று ஆசுவாசமாக நகர நினைத்தால் மானங்கெட்ட வார்த்தைகள் வந்து விழும். அழகிகள் சிலர் வேலையில் கவணம் செலுத்த முடியாமல் செய்தாலும், ஒரு நன்மதிப்பு கூடிய புன்னகை கூட அவர்களிடத்தில் விட்டுசென்றதில்லை. இஷ்டமில்லை, பிடிக்கவில்லை என்று சாக்குபோக்கு சொல்லாமல் வேலைப்பளு மட்டுமே உண்மையான காரணமாக இருந்து. இவனைவிட பெரிய வழிசல்களுக்கும் அங்கு இதுவே நிலைமை. அதில் முதல் வழிசல் விசு. விஸ்வனாதன் என்கிற விசு.
சார் நல்லா எழுதுவேளாமே? முகத்திற்கு நேர் எந்த முன்னுரையுமின்றி விசு ஆரம்பித்தார். டேபிளின் அருகே உதவியாளர் நின்றபடி ஃபைலை திருப்பிக்கொண்டிருக்க, ஒரு ஃபைலுக்கு 20 கையெழுத்து. முதல் நிலையாக இவரிடத்தில் ஒப்பம் வாங்கிவிட்டு இன்னும் மூன்று நாற்காலிகள் நகர வேண்டும். எதற்கு? எதற்கோ. விஷயம் அதுவல்ல! விஸ்வனாதன் சாருக்கு அன்று உடனடித்தேவையாக ஒன்று இருந்தது. கூட்டம், லஜ்ஜை என்று நெளியத்தெரியாத மனிதன், நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
என்ன எழுதுவேள், prose? fiction? கவிதை?
எழுதுவேன் சார்.அது proseஆ வந்தா prose..இல்ல எதுவா வருதோ அது.
புரியறது. புதுசு.
அப்படியும் சொல்லலாம். அப்படித்தான் இருக்க விரும்பறேன்.
போன வாரம் குமுதத்துல பாத்தேன் நாலு வரிக்கு எதோ எழுதிருந்தேள். நன்னா இருந்துது. இதுக்கெல்லாம் ஒரு இது வேணும்ங்கறேன். இல்லையா என்று அடித்தொண்டையில் சிரித்தார்.
சரி..நேரா மேட்டருக்கு வர்றேன். என்னோடைய பழைய ஸ்னேகிதம். பெங்களூருல இருந்தப்போ பக்கத்து வீடு. அப்போ பெருசா அழகெல்லாம் கிடையாது. தேஸல்தான். பதினஞ்சு இருவது வருஷத்துக்கப்பறம் இப்ப தான் ஆப்ட்டா. ஆத்துக்காரன் வேற ஏதோ தவறிட்டான் போலருக்கு. என்னமோ ஏதோ தெரியல திமு திமுன்னு ஆயிட்டா. அப்படி ஒரு ஆச்சர்யம். அடையாளமே தெரியலே.
இங்கத்தான் அடையார்ல ஏதோ பொத்தீக் கடையாம். அதான் புடவை , ஜாக்கெட்டெல்லாம் செஞ்சு விப்பாளாம். ஒத்தையா போட்டுண்டு வந்தாளே பாரு. நேக்கு ஒரே இதுவாய்டுத்துன்னா பாறேன். ரெஜிட்ஸ்ரேஷனுக்காக நம்ப வாசல மிதிச்சுத்தான ஆகனும். ஒன்னு சொல்றேன் ஓய். கடவுள் இருக்கான். “ வேண்டத்தக்கதும் அறிவோய் நீ…வேண்ட முழுவதும் தருவோய் நீ” என்று மேலே பார்த்து கைகூப்பி சத்தமாக சிரித்தார். எவருக்கும் எரிச்சல் மூட்டும் உவமானங்களில் விஸ்வனாதனுக்குத்தான் முதல் இடம்.
சந்தோஷம் சார்.
நேக்கு எதுனா ஒன்னு எழுதி தாயேன். ஷீ இஸ் என் இண்டலெக்ட். நிறைய படிக்கிறவோ. எழுத்தறிவும் உண்டு. ஹிந்து சந்துன்னு எதோ ஒன்னு எழுதிண்டே இருப்பா. நான் என்னென்னமோ செஞ்சு பாத்துட்டேன். மசியலே. விட்டகொறை, தொட்டகொறைன்னு ஏன் விடுவானேன். நோக்கு தான் தெரியுமே, நேக்கு தமிழ்னா வேற கொஞ்சம் என்று அடித்தொண்டையில் மீண்டும் சிரிக்க, கையில் கிடைப்பதை எடுத்து அடிக்க வேண்டும் என்று தோன்றியது. அருகே இருப்பவர்கள் முகம்கூட பார்க்காமல், காது மூடி வேலை செய்துகொண்டிருந்தனர்.
நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்கலையே. இதுல தப்பு என்ன இருக்குன்றேன்? ஒரு டேபிள்ல காசு கேக்குறா. ஒரு டேபிள்ல பொருள் கேக்குறா. நான் நட்பு வளர்க்க உதவி கேக்றேன். அதுவும் உங்க கிட்ட தானே. தப்புன்னுபட்டா வேண்டாம். நானும் டீஸண்ட் ஃபேமிலி தான் சார் என்று முகம் சுருக்கிக்கொண்டார்.
ராமிற்கு அன்றைய தினத்தை நினைத்து வருத்தப்படுவதா இல்லை கோவப்படுவதா என்று தெரியவில்லை. முகம் பொத்தி உட்கார்ந்து கொண்டான். மெல்ல சிரித்தான். ஒரு தடவன்னா பரவால்ல சார். நீங்க இருக்குற வேகத்தை பாத்தா அடிக்கடி உதவி கேப்பீங்க போல இருக்கே. ஏன் கிட்ட உதவி கேட்டுட்டு அவங்க கிட்ட என்னென்ன கேப்பீங்களோ. மாமி ஊர்ல இல்லையா?
நோ நோ. ஒரு தடவ போதும்..சும்மா சும்மா கவிதையா பேசிண்டிருந்தா எப்போ ஓய் மிச்சதெல்லாம். என்ன நான் சொல்றது. வெடித்து சிரித்தார்.
ராம் அவரை முறைத்து பார்த்தான். சட்டென்று பேப்பர் கிழித்து எழுதத் துவங்கினான். பேனா சத்தமில்லாமல் பேப்பரை முத்தமிடத் துவங்கியது. பதினைந்து வினாடிகளில் மை காற்றாய் சுழன்றது. வளைவுகளும் கோடுகளும் வட்டமும் புள்ளியும் ஆனந்தக் கிறுக்கலில் எழுத்தானது. பேப்பரை செவ்வகமாக மடித்து அவரிடத்தில் நீட்டினான்.
பார்த்து சார். ரொம்ப சக்தி வாய்ந்தது. எதுக்கும் ரெண்டு காப்பி ஸெராக்ஸ் எடுத்து வெச்சுக்கோங்க. இப்ப இல்லாட்டியும் அப்புறம் தேவைப்படும்.
மாமா நெளிந்து சிரித்து வாங்கிக்கொண்டார். தேங்க்யூ மட்டும் ஐந்து ஆறுமுறை சொல்லியிருப்பார்.
இரண்டு நாள் லீவ் வேணும் சார்.குலதெய்வம் கோவில் போறோம்.
விசு பேப்பரையும் அவனையும் மாறி மாறி பார்த்து. நீ புழச்சிப்படா. டபுள் ஓக்கே என்று சொன்னார்.
மறுநாள் விடயற்காலை புரண்டு படுக்கும் பொழுது ராம் தன் மனைவியிடம் எவ்ளோ காசு இருக்கு என்று காதோரம் கேட்டான்.
தூங்கலையா? என்று அவள் முதுகு உரசி புதைந்துகொண்டாள்.
வரலை. எவ்ளோ காசு இருக்கு?
இருக்கும். ஏன்?
அவளின் முந்தானையை லேசாக கீழிறக்கி சிகப்பு ஜாக்கெட்டின் தோள்பட்டையை நீக்கி முத்தமிட்டான்.வேலைய விட்டுடலாம்னு இருக்கேன்
தூக்கத்திலும் கூச்சம் கொண்டவள் திரும்பிப் படுத்து முகத்தோடு முகம் வைத்து கண்விழித்தாள். சோத்துக்கு என்ன பண்ணப்போறோம்.
எழுதப்போறேன் அஞ்சலி. நிறைய எழுதப்போறேன். வலி உறைக்கிற வரைக்கும் எழுதப்போறேன்.
மனைவி காதருகே மீண்டும் புதைந்து கொண்டு. எப்படிப்பா? நான் வேணா கொஞ்ச நாள் வேலைக்கு போட்டா?
இல்ல வேண்டாம். என்னால முடியும்னு நினைக்கிறேன். திருப்பதி போலாமா?
அஞ்சலி கண் விழித்து ராமை பார்த்தாள். வெறும் நான்கு வினாடி இருக்கும்.
எழுந்து அள்ளி முடிந்து கொண்டாள். அருகே படுத்திருக்கும் 5 வயதை தட்டி எழுப்பினாள். நல்ல காரியத்தை தள்ளிப்போடக் கூடாது. வா உடனே புறப்படலாம். இன்னும் அரை மணி நேரத்துல் கிளம்பினா ராத்திரி பஸ்ல திரும்பிடலாம். மனசுல இருக்குற கொழப்பத்தை ரொம்ப நேரம் வெச்சுக்க கூடாது. அதை உடனே சாமி கிட்ட கொட்டிடனும். அப்பறம் அது பாத்துக்கும். வெந்நீர் வைக்கிறேன். குழந்தைக்கும் உனக்கும் இட்லி ஊத்திக்கிறேன். நீ குழந்தைய கிளப்பு. அப்பா கிட்ட வண்டி கேக்கலாமா? வேண்டாம். ஏன் எதுக்குன்னு கேள்வி வரும்.
புடவையை சரி செய்துகொண்டு வேலையில் இறங்கினாள். கண் இமைக்கும் நேரத்தில் மனைவி அடுத்த வாழ்க்கைக்கு தயாரானாள். மடியில் புதைந்து கொண்ட மகன் இடுப்பை அணைத்துக்கொண்டான்.
சரியாக மதியம் இரண்டு மணிக்கு தரிசனம் முடிந்து வெளியே வந்து கோபுர தரிசனம் பார்க்க அமர்ந்தார்கள். கல்யாணத்துக்கு அப்பறம் வரோம்ல என்று மனைவி கை கோர்த்துக்கொண்டாள். பிள்ளை தோளில் எகிறிக்கொண்டான். ராம் கண்களை மூடியபடி உட்கார்ந்திருந்தான்.
நல்ல விஷயம் மக்களுக்கு போய் சேர்கிற மாதிரி எதாச்சும் எழுதுங்க. நாம்ப எழுதறதுல படிக்கிறவங்க மனசு மாறனும். அதுதான் முக்கியம். நிஜத்தை மட்டும் எழுதுங்க. நிஜத்துக்கு மட்டும்தான் மனச மாத்துற சக்தி இருக்கு என்று கூறி தோள் சாய்ந்து கொண்டாள்
ராம் அவளைப் பார்த்து சிரித்தான். உச்சி முகர்ந்தான். எங்கேர்ந்து என் பெட்டர்மாக்ஸ் இன்னைக்கு இத்தனை பிரகாசமா ஜொலிக்குது.
ஜொலிகல்லாம் இல்ல. நீ எழுதின கவிதை ஒன்னு படிச்சேன். குப்பைல கிடந்துச்சு. எடுத்து, துடைச்சு காயவச்சு, எழுத்து கூட்டி படிச்சேன். முதல்ல ஒன்னும் புரியல. அப்பறம் பொறுமையா உக்காந்து படிச்சதுக்கப்பறம் சட்டுனு மனசு லேசாகிருச்சு. இந்த சோடாபுட்டிக்குள்ள இத்தன இங்க்லீசு இருக்குதான்னு ஒரே ஆச்சர்யம். கையிலிருக்கும் பிரசாதத்தைப் பிய்த்து குழந்தைக்கு ஊட்டினாள்.
என்ன பத்தி எதாச்சும் எழுதுவியா? பேரு மாத்தி எழுது. நான் படிச்சாகூட தெரியக்கூடாது. சரியா?
சரி. ராம் அவளை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
சில சமையம் நன்றிகடன்.
அஞ்சலி அவன் முகம் திருப்பி கோபுரம் பார்க்கச்சொன்னாள். மகனிடம் கை நீட்டி எதையோ காண்பித்தாள். ராம் கோபுரத்தை பார்த்தபடி முதலாவதாக என்ன எழுதவேண்டும் என்று வார்த்தைகளை அடுக்க ஆரம்பித்தான். அங்கு தூரமாக மேளத்துடன் மணி சத்தம் கேட்கத்துவங்கியது.
என்றோ ஒரு மத்தியான வேளை, விஸ்வநாதன் தன் முகத்தில் வழியும் வியர்வையை வெள்ளை கர்ச்சீப்பால் துடைத்துக்கொண்டிருந்தார். எதிரே ஒரு பெண்மணி கையில் ஒரு ஸெராக்ஸ் பேப்பருடன் அமர்ந்திருந்தாள். முதல் இரண்டு வினாடிகளுக்கு, குழம்பிக்கொண்டிருந்த கண்கள் அடுத்தடுத்த கட்டங்களில் விரிவடைந்தது.
விசு பதட்டம் குறையாமல் இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருந்தார். படித்தவள் பேப்பரை அதே செவ்வகமாக மடித்து வைத்தாள். மௌனம் காத்தாள். தொண்டையை சரி செய்து கொண்டாள். அருகே இருந்த தண்ணீர் டம்ப்ளரை வேகமாக காலி செய்தாள். விஸ்வநாதன் இன்றைக்கு அடி நிச்சயம் என்று எண்ணிக்கொண்டார்.
ஆர் யூ ஓக்கே மேடம்?என்று நாற்காலியின் நுனிக்கு நகர்ந்தார்.
அமைதியாய் இருந்தவள், கண்ணோரத்தில் உருகிக்கொண்டிருந்த ஐடெக்ஸை நுனி விரலால் அழுத்தி அணை கட்டினாள். அவரைப் பார்த்து லேசாக சிரித்தாள்.
உங்களுக்கு ராம் தெரியுமா சார்?