
ஏழாவது படிக்கின்ற நா காலத்திலிருந்தே தமிழ்ப் பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்து விட்டேன். வாண்டு மாமா எழுதிய வீர விஜயன், தமிழ்வாணன் எழுதிய சங்கர்லால் துப்பறியும் ‘ரகசியம்’ இரண்டும் தான் உலக மகா இலக்கியம் என்கிற ஸ்திரமான அபிப்பிராயம் கொண்டிருந்தவனை சற்றே மாற்றியமைக்கக்கூடிய கதைகள் வர ஆரம்பித்திருந்தன. இந்தப் பத்திரிகை விஷயத்தில் அம்மா என்னை கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தாள் என்பது பிற்காலத்தில்தான் புரிந்து கொண்டேன்.
‘கணக்கு பேப்பரில் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கே?
வாசல் கதவைத் திறக்கும் போதே கேள்வி வரும்.
“கொண்டா விடை பேப்பரை!’
கணக்கில் நூற்றுக்கு தொன்னூத்தொன்பது மார்க் வாங்கியிருப்பேன்.
கணக்கில் நூத்துக்குநூறு தவிர எல்லாமே அவளுக்கு சுழி தான்!
“ஏண்டா இந்த வார சாவி படிச்சியா? மெர்க்குரிப் பூக்கள்னு ஒரு தொடர்கதை வந்திருக்கு! படி படி!’
நான் விகடன் குமுதம் படிப்பதை இப்படி சாடுவாள்.
“எப்பப்பார் தூரம்ணாள் புஸ்தகத்தைப் படிச்சிண்டு இருந்தா இப்படி கணக்கில் சுழிச்சுண்டுதான் வரணும்!”
படித்து விட்டு விவாதித்தோம்.
‘தமிழ் நடை பாத்தியா? என்னமா வெள்ளமாச்சுழிச்சுண்டு ஓடறது! உன்னோட அந்த ஒழுக்கம் விருப்பம் தரும்னு ஒரு வ்யாசம் படிச்சேனே! தமிழாடா எழுதியிருக்க!”
அநியாயத்துக்கு கம்பேர் பண்ணுவாள்!
ஆனால் இரண்டு பேருமே மெர்க்குரிப் பூக்களை விடாமல் படித்தோம். அது பற்றிப் பேசுவோம்.
அம்மா சொல்லும் கருத்துக்களை நான் அப்படியே என்னுடையது 10pi * 6fl ஃப்ரெண்ட்ஸ் குழுவில் எடுத்து விடுவேன்.
லட்சுமி, இந்துமதி. சிவசங்கரி, வாசந்தி, பிரதீபா ராஜகோபாலன் கதைகளுக்கிடையில் நெற்றிப் பொட்டில் அடிக்கிற மாதிரி வந்த கதை மெர்க்குரிப்பூக்கள். உடனேயே அகல்யா. இரும்புகுதிரைகள். தாயுமானவன், கரையோர முதலைகள், பயணிகள் கவனிக்கவும் என்று Impactful எழுத்துக்கள் பாலகுமாரனிடமிருந்த வந்து வாசகர் உலகத்தைக் கட்டிப் போட்ட நாட்கள். அப்பம் வடை தயிர்சாதம் நாவலில் இரண்டாம் உலகப் போரின் நுணுக்கமான விவரங்களையும் காகம் பிறப்பும் கதையில் கர்நாடகா விவசாமி, தஞ்சையின் நாதஸ்வரக்காரர் என்று அந்த பிரதேசத்துக்கேஉரிய மண் வாசனையோடு குடும்பமும் வாழ்க்கையும் நகரம் ரசாயனத்தைச் சொல்லியிருப்பார்.
அவரின் சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் கூட ஒரு நெற்றிப் பொட்டு அடிதான்,
சின்னச் சின்ன வட்டங்கள் கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே. யாதுமாகி நின்றாய் காளி, ஒற்றைக்காகம், அரியா அரியா அரியா என்று கீழ் நடுத்தர வர்க்க ஆசாபாசங்கள் கூரிய மதிநுட்பத்துடன் ஆராயப்பட்டு “பொளேர்”” தமிழில் எழுதப்பட்ட ஞானத்துளிகள்,
மாக்ஸ்முல்லர் பயன் நிகழ்ச்சி ஒன்றில் பாலகுமாரனைச் சந்திக்க நேர்ந்தபோது. சராசரி ரசிகளை விட கொஞ்சம் மக்குத்தனத்துடன் நி ஜானகிராமன் மாதிரி நல்லா எழுதறீங்க” என்று பிதற்றினேன்.
“ஜானகி ராமன் கதையெல்லாம் ஒனக்கு புரியறதா? அவர் கேட்ட கேள்வியின் அர்த்தம் எனக்கு
நாற்பது வயதில்தான் புரிந்தது.
கதையின் பிள்னணியில் உள்ள வாழக்கையும் அதன் தந்திரங்களும் என்பது புரிந்தபோது எனக்கும் சில ஏமாற்றங்களும் துரோகங்களும் நிகழ்ந்து விட்டிருந்தன.
“ஏன் இவ்ளோ சீக்கிரம்” என்று சிலரைக் கேட்க வைத்த சுயசரிதம் எழுதினார் அந்தக் கேள்விக்கு பதில் அதன் தலைப்பே என்பது எனக்கு “முன் கதைச் சுருக்கம் படித்தபோது புரிந்தது.
*’நீ பீன்ஸ் நறுக்கத்தான் லாயக்கு” என்று தந்தையாலேயே பேசப்பட்ட பாலகுமாரனின் “நான் பள்ளிப்படிப்பு நெட்ரு போட்டு ஒப்பிக்கும் ஆசாமி இல்லை. நான் வேற மாதிரி” என்ற உலகாயுத வெற்றிக்கான கனவும் வெறியும் உழைப்பும் முன்கதைச் சுருக்கத்தில் இவரின் பர்ஸனாலிடியைத் தெளிவுபடுத்தி விட்டது.
எழுபது வயதில் மூச்சுத்தினறி மூக்கில் ட்யூபைத் திணித்துக் கொண்ட ஒரு மனுஷன் தன் உடல்நிலை தவிர வேறு சிந்தனையில் இருக்க முடியுமோ?
ஆஸ்பத்திரியில் இவர் “இன்னும் வாழ
வேண்டுமே என்று குருவைப் பிரார்த்தித்துக்கொள்வது’ இன்னும் எழுத வேண்டிய நாவல்கள் பற்றின கவலையோடுதான் என்பது தெரிந்தபோது ஆச்சரியமே ஏற்படவில்லை.
அதுதான் பாலகுமாரன்! ‘நாட் நௌ ! கம் லேட்டர்!”
விரட்டின குருவை விடாமல் பிடித்துக் கொண்டு போராடி, எல்லா சோதனைகளிலும் அவரிடம் வென்று காட்டி, அவரை நெருங்கி, அவரால் கடவுள் தரிசனம் கண்டு, இன்று அவரை உலகைமே கொண்டாட வைத்துக் கொண்டிருக்கும் பாலகுமாரன் ‘அன்றே அப்படித்தான்” என்பது இன்று தெரிகிறதா? ”இளையராஜா போறாராம்!”
“ஜேசுதாஸ் கூட அடிக்கடி வருவாராம்!” இங்கொன்றும் அங்கொன்றுமாய் மட்டுமே பேசப்பட்டு தேரடித் தெருவில் அமைதியாக இருந்த கடவுளின் குழந்தை, யோகி ராம்சுரத்குமாரரை இன்று அறியாதவர்களே இல்லை என்றால் அது பாலகுமாரனின் எழுத்தினாலும் தான் என்பதை நான் உரத்துச் சொல்வேன்.
‘நாட் நௌ,கம் லேடர்” என்பது ஒரு நாள் ” will live through Balakumaran’s pen” என்று அந்த மஹானைச் சொல்ல வைத்த பக்தி, உண்மையைத் தவிர வேறு எதானுமாய் இருக்க முடியுமா?
குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் எவ்வளவு அவசியம் என்பதை இவர் தன் வீட்டு அனுபவங்களின் மூலமே பாடமாகப் போதித்தும் வீடு தேடி வரும் மனம் கலங்கிய வாசகரைத் தெளிவுப்படுத்தியும், அது இன்னும் பலருக்குப் போய்ச் சேர கதையாக எழுதிப் புரிய வைத்ததும் எந்த ஒரு எழுத்தாளரும் எளிதில் செய்ய விரும்பாதது.
“எழுத்தெல்லாம் ஒரு தவம். எல்லோருக்கும் வராது. அது அடி வயிற்றில் உண்டாகும் ஒரு திராத எழுச்சியின் விளைவு” என்றெல்லாம் பம்மாத்துப் பண்ணி, வாசகனை அண்டவிடாமல், “என் எழுத்தைப்படி கொண்டாடு. ஆனால் என்னை நெருங்காதே!” என்று தரைக்கு ஒரு அடி மேலே உலாத்திக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் மத்தியில் இந்த மனப்போக்கைஉடைத்துக் காட்டியவர் இவர்.
‘சார்! நான் வாழ்க்கையில் தோத்துப் போய்டுவேன்னு பயமா இருக்கு ! நீங்கதான் உதவணும்!”
இப்படி ஒரு வாசகன் கேட்க வேண்டுமென்றால் அவன் எழுத்தாளர் மீது எப்பேர்ப்பட்ட நம்பிக்கை வைக்கிறான்? அந்த நம்பிக்கை சுலபத்தில் வந்துவிடுமா?
தான் பார்த்தே அறியாத ஒருவன் மனதில்
இந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் எழுத்து
வெற்றியல்லாது வேறென்ன!
அந்த நம்பிக்கையை இவர் வெறும் எழுத்தில் மட்டுமில்லாது செய்கையிலும் நிரூபித்திருப்பது தெரியுமா?
இன்றல்ல. போன வருஷமல்ல. இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே வெளியான இவரின் புத்தகங்களில் முன்னுரை மதிப்புரை இருக்கிறதோ இல்லையோ. சில முகமறியா வாசகர் கடிதங்கள் வெளியிடப்பட்டிருக்கும். தான் போற்றி வியந்து படித்து ரசிக்கும் வாசகன் இவருக்கு ஆர்வத்தில் கடிதம் எழுத, அக்கடிதம் புத்தகமாய் அவன் பெயர் தாங்கி அச்சில் வரும்போது, அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சியும் அவன் சுற்றம் சூழலில் அவனுக்கு உண்டாகும் பெருமை அளவிடவே முடியாது. அவனுக்கு மிகப் பெரிய வெற்றிக்கணத்தைத் தரும் செயல்.
வாசகனை அப்படிக் கொண்டாடியவர்
பாலகுமாரன்.
தஞ்சைக் கோயிலை இவர் பார்த்த விதமே அலாதியானதுதான். அந்தக் கோயில் இவருக்கு வெறும் கோயிலாக இருக்கவில்லை. “இது என் இடம். நான் இங்கிருந்தவன்” என்று அரற்றி, உணர்ந்து கோயிலை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து பல முறை பயணப்பட்டு அந்த தாக்கத்தின் இறுதியின் ராஜராஜசோழனைக் கொண்டாடி ஒரு உடையாரை எழுத வைத்த கோயில்
உடையார் நாவலின் மதிப்புரையை யாராலும் முழுமையாக எழுதிவிட முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஐவர் யானைத் தொட்ட கதைநாம் படித்து உணர்ந்தவிஷயங்களைப் பற்றித் தான் எழுத இயலும். அப்படிப்பட்ட விஸ்தீரணம் கொண்ட நாவல் உடையார். ஒரு மானேஜ்மெண்ட் ஆசாமியாய் நான் வியந்த நிர்வாகம், ஆளுமை, மக்கள் தொடர்பு, மகனையும் மந்திரியையும் அரச விவகாரங்களையும் கோயில் கட்டும் மாபெரும் ப்ராஜக்டின் சகலவித அட்மினிஸ்ட்ரேஷன் நுணுக்கங்கள், சாதாரண மக்களின் வாழ்வு முறை, அவர்களின் தந்திரங்கள், தினப்படி அவலங்கள், கூர்மையான பார்வை,சூட்சுமங்கள், ஆதரவும் அதிகாரமும் பயன்படுத்திய முறை…
அதே போல் கங்கைகொண்ட சோழனின் “காஞ்சிக்கருகில் மரணமடைந்தான்…” என்ற ஒரு வரி சரித்திரத்தை எடுத்து, அதைச் சுற்றி ஒரு மாபெரும் உணர்ச்சிக் குழம்பைப் பின்னி இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்கிற extrapolation சுலபமில்லை. இது கற்பனை மட்டுமில்லை, சரித்திரம். ஒரு இழை பிசகினாலும் பாய்ந்து கிழிந்து எறிவார்கள். ஆனால் அந்த சரித்திர இழை அலுங்காமல் நலுங்காமல், கடைசி காலத்தின் வாழ்க்கை நிகழ்வுகளை, ஒரு எழுபது எண்பது வயதினருடைய மனக்கிலேசங்களுடன், நொய்மைகளுடன் அதே சமயம் தேசத்தின் மீதும் மக்களின் மீதும் தன் அரச குடும்பத்தின் மீதும் மாறாத அப்புடனும் வாழ்த்து முடிந்த கதையை இந்தனைஅடர்த்தியாக எழுத இயலுமா? ராஜராஜனின் இறப்பைப் பற்றி உடையாரில் படித்த போது இதைவிட அருமையாக இனி ஒருவரால் எழுத முடியுமோ என்று நினைத்திருந்தேன்.
அந்த உடையார் பாலகுமாரனையும் தாண்டி எழுதியிருக்கிறார்.
யார்?
அதே பாலகுமாரன் தான்!
பெண்வழிப் பேரன் குலோத்துங்கனும் தாத்தா ராஜேந்திரரும் குலாவும் எழுத்துக்கு வார்த்தைகளே இல்லை. எப்படி சாத்தியமாயிற்று என்று வாழ்நாள் முழுவதும் யோசித்துக் கொண்டே இருக்கப் போகிறேன்.
இவை எல்லாவற்றையும் ஸ்படிகமாக வெளிக் கொணர்ந்த தமிழ் நடையில் பாலகுமாரன் விவரித்திருந்த நேர்த்தி ஒரு சாதாரண மனித யத்தனத்தினால் நடக்கக்கூடிய விஷயமாக எனக்குத் தெரியவில்லை. அதீத குருவருள் இங்கே பாலகுமாரனை செயல்படுத்தியதாகத் தான் அவரும் சொல்கிறார்.
காதல், கோபம், துரோகம், தந்திரம் என்று சக மனித வாழ்க்கையின் படிமானங்களை கதையில் எழுதி வந்த பாலகுமாரன் ஒரு கல் புரண்ட நேரத்தில் ‘இனி என் எழுத்து கடவுளும், அவரை அடைய முயலுவதும் தான்” என்று குருவருளால் மாறிப் போனார்.
மகாபாரதமும் கிருஷ்ண லீலாவும். நாரத முனியும். இரண்யகசிபும். ராவணனும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறையடியார்களும் அவர் எழுத்தில் மிளிர்ந்து லட்சோபலட்சம் வாசகர்களுக்கு ஆன்மீகப் பாதையின் கதவைத் திறந்து விட்ட நிதரிசனம் நமக்குத் தெரியும்.
தமிழ்நாட்டின் கோயில்கள் பற்றி இவர் எழுதியதாலே இன்று பல கோயில்களில் கூட்டம்.
“சும்மா போய் கூட்டமா கோவிந்தா போட்டு தின்னுட்டு வராத! ஒவ்வொரு கோயிலையும் நிதானமாப் பாரு. கல்வெட்டுக்களைப் புரிந்து கொள் நம் நாகரீகம் பற்றித் தெரிந்து கொள்”
இடம் இடமாக இவர் எழுத்தப் போக, இன்று கோயிலுக்குப் போகிறவர்கள் கேள்வி கேட்டுகாயில் பற்றித் தெரிந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது.
“வாழ்க்கையின் பொருளை உணர்ந்து கொள்! தின்று சுசித்து நடமாடுவதே வாழ்க்கையில்லை!”
மாய்ந்து மாய்ந்து கதையாகவும் கட்டுரைகளாகவும் எழுதி பேசி அலுப்பின்றிச் சொல்லியும் வருகிறார்.
என்ன லாபம் இந்த மனுஷனுக்கு?
காசா, பணமா, புகழா, இல்லை விருதா? ஒன்றுமில்லை.
இது என் கடமை என்று தனக்குத் தானே ஒரு பொறுப்பை எடுத்துப் போட்டுக் கொண்டு உழைக்கிறார்.
‘வாழ்வு பெரும்பயணம். அது நீங்கள் நிற்கும் இடத்தில் முடியவில்லை. அது போகும் தொலைதூரம். பல காலம். இவ்விதத்தை அறியாது நீங்கள் முடியப் போவது இல்லை. இது உறுதி.”
“இது போதும்” என்னும் வாழ்க்கை தரிசன நூலை எழுதிய பாலகுமாரன் இவ்வாறு சொல்கிறார்.
எது போதும்?
இந்த அபார மனிதருக்கு நாம் கொடுத்திருக்கும் இடம் போதுமா?
நான் சொல்லப் போவதில்லை, நீங்கள் யோசித்துப் பாருங்கள்.
குற்ற உணர்ச்சி தோன்றுகிறதா? தோன்றட்டும். தோன்ற வேண்டும்.
இவரைக் கொண்டாட வேண்டும். மாபெரும் ஆலமரம் ஆயிரம் வருஷம் இருக்கும். குளிர் நிழல் தரும்.
மனித உடல் கொண்ட நாம்தான் சாஸ்வதமா என்ன? ஒரு நாள் இங்கிருந்து மறைவோம். மறக்கப்படுவோம். இருக்க மாட்டோம்.
ஆனால் இவர் இருப்பார். சூரிய சந்திரர் உள்ள வரை இவர் இருப்பார். நம்மோடு பேரிக் கொண்டிருப்பார். வழி நடத்திக் கொண்டிருப்பார். இந்த நெடுமரத்தின் நிழவில் ஞானம் பிறக்கும்.