Suryaa's Blog

தாய் எனும் சக்தி – சூர்யா பாலகுமாரன்

‘என்றென்றும் அன்புடன்’ என்றொரு புத்தகத்தின் துவக்கத்தை என்னால் எப்பவுமே மறக்க  முடியாது. முழு புத்தகமும் கிறங்கடிக்க வைக்கும் என்றாலும் அந்த ஓப்பனிங் சீன், முதல் சில பக்கங்களில் வரும் காட்சியமைப்பு மிகவும் அழகாக இருக்கும். எழுத்தாளர் பாலகுமாரனைத் தெரிந்தவர்களுக்கு ‘என்றென்றும் அன்புடன்’ ஒரு ஆட்டோபயோகிராஃபி போன்ற கதை என்று எல்லோருக்கும் தெரியும். தன் வாழ்க்கையின்  மிக முக்கியமான ஒரு பகுதியை கதாபாத்திரங்களின் பெயர் மாற்றி எழுதியிருப்பார். அதனாலோ என்னவோ எனக்கு அந்த புத்தகத்துடன் நெருக்கம் இன்னும் அதிகமானது. காதல் நிரம்பி வழியும் அந்த படிக்கும் போதே என்னுடைய ஃப்ளாஷ் பேக்கை படிப்பது போன்ற ஒரு உணர்வு. அதில் வரும் கதாபாத்திரங்களே என்னை உருவாக்கியவர்கள், அரவணைத்து வளர்த்தவர்கள். 

அதுவும் அந்த ஓப்பனிங் சீனில் வரும் பெண், வீட்டிலே பிடிவாதமாக சொல்லிவிட்டு ஒற்றைப்பையுடன் காதலுக்காக அனைத்தையும் உதறிவிட்டு ரயில்வே ஸ்டேஷனில் சென்னைக்கு புறப்படும் டிரெயினில் அமர்ந்து பச்சை சிக்னலுக்காக காத்துக்கொண்டிருக்கும் காட்சி எனக்கு ஒரு மணி சார் படம் பார்ப்பது  போலத் தோன்றும். அந்த பெண்ணின் தம்பி விஷயம் கேள்விபட்டு சரசரவென்று கம்பார்ட்மெண்ட் கம்பார்மெண்டாக தேடி வந்து வாட்டர் பாட்டில் வாங்கிக்கொடுத்து, வாழ்த்துகூறி வழியனுப்பி வைக்கும் பக்கங்கள் கண் முன்னால் திரைப்படம் போல் இசையுடன் ஓடும். அந்தப் பெண் தான் என் அம்மா.  ஓடி வந்து வழியனுப்பிவைத்தவன் மாமன் என்று தெரிந்து படிக்கும் போது சின்ன நடுக்கத்திற்குப்பிறகு நான் மூழ்கிப்போனேன். 

யாருக்குமே கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்தது. தன் தாயின் காதலை, ஊரே ரசித்துக் கொண்டாடிய ஒரு புத்தகத்தின் மூலம் படிக்கக்கிடைத்தது. என் அம்மா முதுமையின் நுனியில் நுழையும் போது அவள் இளமைக்கால காதல் எனது கையில் புத்தகமாக கிடைத்தது. எத்தனைபேருக்கு இது நடந்திருக்கும் என்று தெரியவில்லை. ஒரு வயதில் காதல் என்றால் என்ன என்ற புரிதலுக்கு நான் தள்ளப்படும் போது எனது அம்மாவிற்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தை படித்துத் தெரிந்து கொள்வது அத்தனை உதவியாக இருந்தது. பக்கத்தில் உட்காரவைத்து, இது என்ன, ஏன் இப்படி என்று கேள்வி கேட்டிருந்தால் கூட சிலது தவிர்க்கப்பட்டிருக்கும், சிலது வேண்டாம் என்று மறைக்கப்பட்டிருக்கும், சிலவை பொய்யாக மாறியிருக்கும்.  ஆனால் கோர்வையாக ரசித்து ரசித்து எழுதிய எழுத்துக்களைப் படிக்கும்பொழுது இதுவே உண்மையாக இருக்கட்டும் என்று மனது ஏற்றுக்கொண்டுவிட்டது.  வேறு எதுவேண்டுமானாலும் நிஜமாக நடந்திருக்கட்டும். ஆனால் எனக்கு இந்த அழகான, வாழ்க்கையைப் பற்றிய புரிதலின் உதாரணமாக விளங்கும் இந்தக் கதைதான் என்னுடைய ஃப்ளாஷ் பேக் என்று முடிவு செய்துவிட்டேன். 

சிறுவயதில் விளையாட்டு சூர்யாவின் அம்மாவாக இருந்த சாந்தா அந்த புத்தகத்தை படித்தபிறகு என் கண்களுக்கு வேறு ஒரு விஸ்வரூபம் எடுத்து மனதுள் தங்கிக்கொண்டாள். இன்று வரை அந்த சாந்தா தான் எனக்கு எப்பொழுதும் பெஞ்ச்மார்க். அச்சுபிச்சாக இருந்த என்னை காதலிகள் கூட பொறுத்துக்கொண்டு வழிந்த காலகட்டத்தில், இப்படி அசட்டுத்தனமா இருந்தா யாருக்கும் பிடிக்காது என்று முகத்துக்கு நேர் சொல்லிக்கொடுத்தவள். என் முதிர்ந்த செயல்பாடுகள், அந்த மாற்றத்தின் துவக்கம் எல்லாம் அவளின் வழி நடத்தலே. 

நாம் யாவரும் வீட்டில் ஒருவரை முன்னுதாரணமாகவே கொண்டு வளர்வோம். கொச்சையாக சொல்லப்போனால், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே காப்பியடிக்க முயற்சி செய்வோம். பிடித்த நிறம், உணவு, பேசும் த்வனி, மொழி, மேனரிஸம்,ஐடியாலஜி, சமையலில் உப்பு வரை வீட்டில் உள்ள ஒருவரையே பின்பற்றுவோம். நான் இன்று வரை அப்படிப் பின்பற்றுவது என்னுடைய சாந்தாவை மட்டுமே. 

பல பேர் எழுத்தாளர் பாலகுமாரனைக் காதலித்திருந்தாலும் சாந்தாவைப்போல் யாரும் காதலித்ததில்லை. இது பாலாவிற்கும் தெரியும். அவருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும். இந்த அறிதலே குடும்பத்தினரிடையே ஒரு முக்கியமான பாண்டிங்கை, ஒரு முழுமையை உருவாக்குகிறது. இந்த முழுமையே  நல்ல வளர்ப்பாக மாறுகிறது. வளர்ப்பு தான் வாழ்க்கைப் பாடம். Basic Grammer.

ஒரு கிரியேட்டருக்கு காதல் என்பது மிகவும் சுலபமான ஒரு செயல். சட்டென்று எதிராளியை கவர்ந்து கிறங்கடித்து செயலற்று நிற்க வைத்துவிட முடியும். அவனுக்கு அது கைவந்த ஒரு கலை. ஆனால் ஒரு கிரியேட்டரைக் காதலிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். அவர்களைப் புரிந்து கொள்ளுதல் மிகவும் சிரமம். எது எங்கு கடிக்கும் எங்கு கொஞ்சும் என்று தெரியாது விழி பிதுங்கவைக்கும்.  ஆனால் 37 வருடம் அக்‌ஷரம் பிசகாமல் துளிகூட மாறாமல் பாலகுமாரனைக் காதலித்துக் கொண்டிருந்தது மிகப்பெரிய ஆச்சர்யம். ஆடிப்பெருக்கில் காவிரிக்கரையோரம் கைப்பிடித்த நொடி முதல் பெசண்ட் நகர் சுடுகாட்டில் கை நழுவி விட்டவரை அத்தனையும் காதல். சாத்தியமே இல்லாத விஷயங்களை இந்தக் காதல் செய்து முடித்திருக்கிறது. இன்றளவும் உதரணமாக நின்று பலபேரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. கண்மூடித்தனமாக வேகமாக செல்லும் இந்த prejudiced உலகத்தை நின்று திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. அடையாளாமாக வாழ்ந்து காட்டியிருக்கிறது. 

கணவன் மனைவி மற்றும் மாத்திரைகள் என்று உடலுபாதைகளுடன் வாழ்ந்த ஒரு காலகட்டத்தில் இவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அக்கறையை பார்த்து எட்ட நின்று ரசித்திருக்கிறேன் . படுக்காமல் தூங்காமல் மருத்துவமனை வெய்ட்டிங் ஏரியாவில் பல நாட்கள், தனக்கு முடியாவிட்டாலும் உட்கார்ந்திருப்பது, பொதுக்கழிப்பிடத்தில் குளித்து உடுத்திக்கொண்டு காத்திருப்பது கடனே என்றா? இது காதல். காதல். காதல்.

ப்பா! சொல்லும்போதே சிலிர்க்கிறது . நினைக்கும் போதே இளையராஜாவின்  C major chord உள்ளே ஒலிக்கிறது. பாலா என்பது ஒரு Transfomer ஆக இருப்பினும் அதன் power source நிச்சயமாக சாந்தா தான். எழுந்து நடமாட வைத்து இன்னும் சில தூரம் ஓடுவோம் பாலா ,வா பாலா, பல்ல கடிச்சு பொறுத்துக்கோ இதோ ஜெய்ச்சிட்டோம் இதோ ஜெய்ச்சிட்டோம் என்று கைப்பிடித்து ஓட வைத்தது சாந்தா பாலகுமாரன் தான். அவளால் மட்டுமே இது சாத்தியமாயிற்று.  எனக்கு இவள் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு, இவளுடன் சமகாலத்தில் மிக அருகிலிருந்து  வாழ்ந்தது, இவள் வாழ்க்கையை உற்றுப்பார்த்தது, அதிலிருந்து கற்றுக்கொண்டது நான் என்றோ செய்த புண்ணியம். வாங்கி வந்த வரம்.

அப்பா என்கிற ஒரு பெரிய ஆலமரம் சரிந்தவுடன் முடிந்துவிடாமால், மீண்டும் எங்கள் கை பற்றி இன்னும் இறுக்கமாக பிடித்துக்கொண்டு வா வா இன்னும் கொஞ்சம் தூரம் தான் வா என்று ஓடுபவள் சாந்தா பாலகுமாரன். இவள் சக்தி. சக்திஸ்வரூபி. தெய்வாம்ஸம். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இப்படி ஒரு அம்மா என்று பொய்யாய் பிதற்றாமல், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஏதோ ஒரு தொடர்பில் ஏதோ ஒரு உறவில் ஒரு ரூபத்தில் என் அருகிலே வந்து நில், எனக்கு அது நீ தான் என்று புரிந்து விடும். உனக்கும் புரியும். 

இன்று அயான் அவன் அம்மாவை விட்டுக்கொடுக்காமல் பேசும்பொழுது மிகச் சந்தோஷமாக இருக்கிறது. அது எப்படி? அடிப்பது அவள், அரவணைப்பவன் நான், திட்டுபவள் அவள், தட்டிக்கொடுப்பவன் நான், பொளேரென்று அடித்தற்கு ஈடாக டாய்ஸ் வாங்கிக்கொடுப்பது நான் ஆனால் அவன் அம்மாவை ஒரு அதட்டலிட்டால் கூட என்னை முறைத்து பார்த்து, ஏய்! என்று மிரட்டவைக்கிறது. லஞ்சம் எல்லா வேலைகளையும் செய்துவிடாது என்பதற்கு நம் வீட்டிலேயே இப்படி ஒரு உதாரணம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. 

நானும் என் சிறுவயதில் அப்படித்தான் இருந்திருக்கிறேன். ரொம்ப திட்டிட்டாளாமா என்று கட்டியணைத்துக் கொண்டதிலிருந்து  தலைசுற்றி படிக்கட்டில் சரிந்த போது அலறியடித்து அழுது கட்டிக்கொண்டது வரை நானும் அப்படி ஒரு வெறி பிடித்த அபிமானியாக இருந்துள்ளேன். I am crazy about you மாதிரி ஒரு அபிமானி. Fan கூட அல்ல Fanatic.

இன்று வரை இந்த வீட்டில் எனக்கு தெரியாத பல விஷயங்கள் அவளுக்கு மட்டுமே அத்துப்பிடி. ஊரையே ரெண்டாக பேத்து கத்தி கலாட்டா பண்ணும் பால்காரக் கிழவி கூட இவள் அன்புக்கு அடிமை. அப்படி ஒரு people management.  அப்படி ஒரு அதிகாரம். தெளிவிருக்கும் இடத்திலே மட்டும் தான் அதிகாரம் இருக்கும். அந்த அதிகாரத்திற்கு முன் அனைவரின் வாக்கும் வாக்குவாதங்களும் வெறும்  அச்சுப்பிழைகளே. என்றோ ஒரு நாள் அவள் எடுத்த முடிவு தவறுதாலாக கூட இருந்தால் கூட, அது நமக்கு ஒரு பாடமாக இருக்குமே தவிர disaster ஆக மாறாது. உற்று நோக்கினால் அதில் கூட நாம் காப்பாற்றப்பட்டிருப்போமே ஒழிய, பிழையாகவே ஆகாது. இது சாந்தா பாலகுமாரனுக்கு மட்டுமல்ல அனைத்து அம்மாக்களுக்கும் பொருந்தும். 

“ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்.” 

இது ஒவ்வொரு மகனுக்கோ மகளுக்கோ மட்டுமல்லாமல் ஒவ்வொரு அம்மாவிற்கும் பொருந்தும். இது தான் அவளுக்கும் வாழ்க்கையின் இலக்கு. இந்த செய்தியே சந்தோஷம். சான்றோர் என்று அறியும் அந்த நொடியே வாழ்க்கை அவளுக்கு உண்மையான நிறைவைத்தரும். இது பல முறை என்னால் என் தாயிற்கு சிறு சிறு செயல்களில் நிகழ்ந்திருந்தாலும், நாங்கள் இருவருமே ஒரே ஒரு கனவுடன், ஒற்றை இலக்குடன் தான் எங்கள் வாழ்கையை எதிர் நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம். அதைத் அவள் காலத்தில் அவளுக்குத் தருவதே , காதுபட கேட்க வைப்பதே நியாயம்.

இன்னும் கொஞ்ச நாள்தான் சாந்தா, அப்பாவிற்கு ஏதோ அவசரம். நீ பொறு, கூடவே இரு, வெகு நிச்சயமாய் அந்த சத்திய ஒலி பிளிறலாய் உன் காதுகளில் கேட்கும். அப்படி கேட்கும்போது கூட நான் உன் அழகை ரசித்தபடி உன்னைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.

cheers!

(பி/கு: அப்பாவை பற்றி நான் அதிகம் பேசியதுண்டு, எழுதியதும் உண்டு. அம்மாவைப் பற்றி இதுவரை நான் யாரிடமும் பேசியதும் இல்லை எழுதியதும் இல்லை. இதுவே முதல் முறை.)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *