
தங்களுக்கு 79 வயது. என்னைப் பொறுத்த வரை வயது என்பது பிறந்த ப்தினைந்து வருடங்களுக்கு பிறகு தான் கணக்கிட வேண்டும். அப்பொழுதுதான் உண்மைகள் புலப்பட்டு வாழ்க்கை துவங்கும். என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு.
ஆனால், உங்களுக்கு 79 வயதும் கணக்கில்தான் வரும். காரணம்? நீங்கள் பிறவி ஞானி. அற்புதமான அனுபவம். சித்தர் பீடம். கடவுள் அனுப்பி வைத்த குழந்தை.
உங்களுடன் பணிபுரிந்த காலங்கள்.! முதலில் வாய்ப்பு என்று நினைத்தேன். மன்னிக்கவும். இளமையின் திமிர் அது. பின்னர் வசதி என்றும் நினைத்தேன். மீண்டும் மன்னிக்கவும். பணம் வரத் துவங்கிய தருணம் அது. காலங்கள் ஓடி மனம் பக்குவப்பட்ட பிறகுதான் புரிகின்றது அது வரம் என்று…
ஒரு சாலையில் உங்களைக் கடந்து போன எனக்கே இப்படி என்றால் உங்களுடன் வாழ்ந்தவர்களும், வாழ்கின்றவர்களும் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவர்களோ…. கடவுள் கொடுக்கும் பிச்சை அது. தவம் செய்திருக்க வேண்டும். தானாய் கிடைக்காது.
உலகம் தங்கள் எழுத்துக்கு கொண்டாடலாம்.
பாதச்சுவட்டிற்கு கொண்டாடலாம். ஆயின் எனக்கு என்றைக்கும் நினைவிருப்பது உங்கள் கண்களில் எப்பொழுதும் பளிச்சிடும் உண்மையின் ஒளி. அணையாத ஜோதி.ஸ்ரீ யோகிராம் சுரத்குமார் குடியிருக்கும் குடில்.
நீங்கள் எப்பொழுதும் சொல்லும் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றது. உண்மையான குரு என்பவர் உன்னைத்தேடி வருவார். நீ தேடி அலைய வேண்டாமென. காத்திருக்கும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். அழைப்பு வரும் வாசலில் கண் இமைகள் தாழ்த்தி காத்திருக்கிறேன்.
பல தருணம் உங்களை சந்திக்க வீட்டுக்கு வந்திருக்கிறேன். எப்பொழுதும் ஓயாத முழக்கம். “ஸ்ரீ யோகிராம் சுரத்குமார்” ஒரே எண்ணம். அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும். ஓயாத அலை போல இந்த 79 வயதிலும் மற்றவர்களுக்காக பிரார்த்திக்கும் எப்பேற்பட்ட மகான் ஐயா தாங்கள்…
விரைவில் “உடையார்” உருவாகலாம். ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன். பௌர்ணமி நிலவை பூமியில் இருந்து பார்த்து சித்திரம் வரையும் முயற்சி அது.
என்னைப் பொறுத்தவரை தங்கள் பிறந்த நாள் மாபெரும் பண்டிகை கொண்டாடுவேன்.