அத்தியாயம் 3
ஒரு கால கட்டம் வரை தான் அலைபாயுதே பாடல் என்னை கிறங்கடித்தது என்று மூன்றாவது அத்தியாத்தில் கூறினால் நீங்கள் என்னைக் கொல்லவா போகிறீர்கள். யதார்த்ததின் உச்சம் என்பது மாற்றம் மட்டுமே. மாற்றம் என்பது எப்போதும் பேரிடர் அல்ல. சில சமயம் சின்ன அலையாகவும் மெல்லிய காற்றாகவும் மழையாகவும் புரட்டிப்போடும். எனக்கும் மாறியது. தடம் புரண்டு அலைபாயுதே பாடல் மறந்து போனது.
இன்னும் adolescent கூட எட்டாத வயதில் மாற்றங்கள் சுலபமாகவே நிகழும். மறந்தும் போகும். அவை சில நாட்களில் சில சமயங்களில் ஏன் சில மணி நேரத்தில் கூட நிகழலாம். எதிலும் ஒட்டிக்கொள்ளாத மனதிற்கு எதுவுமே முக்கியம் இல்லாதது போலவே இருக்கும். posssesiveness jealousy insecurity களுக்கு அப்பாற்பட்ட வயதில் வரும் காதல்களை என்னவென்று சொல்வது.
நீங்கள் கேட்கலாம், இத்தனை சிறு வயதில் வருவது பெயர் காதலா? எல்லோருக்கும் இது நடக்குமா. இல்லை பிஞ்சில் பழுத்த எனக்கு மட்டுமே தான் சாத்தியமா. இல்லை வார்த்தை ஜாலத்திற்காக எழுதும் பொய் பித்தலாட்டமா.
உங்கள் வீட்டு குழந்தைகளை கவனித்தால் இது புரியுலாம். காதல், உறவு, உணர்ச்சி என்கிற வார்த்தைகளின் அர்த்தம் புரிவதற்கு முன் ஏற்படும் ஆசைகளை எதில் கணக்கிடுவது. இங்கு ஒரு ரூபாய் சாக்லேட்டும் சிரித்துப்பேசும் சொர்ணலதாவும் ஒன்று தானே. சில சமயம் ஒரு ரூபாய் சாக்லெட் இன்னும் அதிகமாக காதலிக்கப்படுவது வேடிக்கையாகவே இருக்கிறது.
வீட்டில் இருக்கும் கணவன் மனைவி அன்யோன்யத்தை பார்த்து கவனித்து அதை அச்சு அசல் அப்ப்டியே காப்பியடித்து வெளியே வேறு யாரிடமாவது வெளிப்படுத்த குழந்தைகளுக்கு பிடிக்கிறது. அவர்களின் ஒவ்வொரு அசைவும் அறிவும் பெரியவர்களாக மாறுவதை நோக்கியே இருப்பதால் வீட்டில் அரங்கேறும் சின்னச்சின்ன காதல் காட்சிகள் அவர்களுக்கு மனதில் பதிகிறது.
காஃபி குடிச்சியே, நல்லா இருந்துச்சா. தாங்க்ஸ் சொல்ல மாட்டியா என்று மனைவி கிச்சன் கதவில் சாய்ந்து கண்கள் குறுகுறுத்து கேட்க.
பாய்ந்து சென்று சமையற்கட்டில் கட்டியணைத்து தாங்க்ஸ் என்று சொல்ல குழந்தையும் வந்து அணைத்துக்கொள்கிறது. அதே போல் பள்ளிக்கூடத்தில் எனக்கு தாங்ஸ் சொல்ல மாட்டியா என்று ஒரு சின்ன பெண் குழந்தை கேட்டால் அப்பாவைப்போல் பாய்ந்து நன்றியை வெளிப்படுத்துகிறது. இதில் எந்த வித கள்ளமும் கபடமும் இல்லை. பாய்ச்சலை எதிரே இருக்கும் பெண்பிள்ளை தடுப்பதும் கூட இல்லை. மாறாக சிரித்தபடி அதை ஏற்றுக்கொள்கிறது. இதை கவனித்துப் பார்த்தால். பயமறியாமல் வளர்ந்து வந்தால் பிரச்சினைகள் குறைவோ என்று தோன்றுகிறது. நின்னா குத்தம் தொட்டா குத்தம் என்கிற வளர்ப்பே பிற்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு அடிக்கோடாக மாறுகிறது.
டேய் என்ன பன்ற? எதுக்கு அவளை கட்டிப்பிடிச்ச…இந்த வயசில செய்ற வேலையா இது…
இல்ல மிஸ் வீட்டில அப்பா இப்படிதான் பண்ணினாரு என்று பல குழந்தைகள் முன் கூற டீச்சருக்கு தூக்கிவாரிப்போடுகிறது.
அப்பாவையும் அம்மாவையும் வரவழைத்து குழந்தையை கை கட்டி நிற்கச்சொல்லி, விவாதமாக்கி பெற்றவர்களை நெளியச்செய்வதின் விளைவு குழந்தைகளுக்கு ஏற்படும் முதல் trauma.
இதை பிழையாகப்பார்க்காமல் சிரித்து கடந்து விட்டால் வேறு விதமாக புரியவைத்தால் பிற்கால சமுதாயத்தில் மிகப்பெரிய மாறுதல் வரும் என்பது எனது கருத்து. இல்லை சுண்டுவிரல் பட்டாலே உணர்ச்சி பீறிடுகிறது, அவளிடம் பேச, நெருங்க பயந்து பயந்து செல்ல வேண்டும் என்கிற ஆபாசங்களை கற்றுக்கொடுத்துக்கொண்டே இருந்தால் நாம் மேலும் மேலும் பல சமுதாய அதிர்ச்சிகளை சந்தித்துக்கொண்டே இருக்க நேரிடும்.
எது எப்படியோ இந்த புரிதல் எனக்கு சிறுவயதில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. எதுக்கு அந்த பொண்ணு கூட பேசின என்று காது திறுகி உட்கார வைத்த பள்ளிக்கூடத்தின் வளர்ப்பு தான் நான். இதனால் நான் பிற்காலத்தில் பட்ட அவஸ்த்தைகள் பின் வரும் அத்தியாயங்களில் காண்க. மீண்டும் கதைக்குள்.
கிறங்கடித்த காதல் வார்த்தைகளைக் கொண்ட அலைபாயுதே கண்ணா பாடல் கொஞ்சம் கொஞ்சமாக மறந்த காலம். மறதியின் மிகப் பெரிய கொடுமை நேரங்காலம் தெரியாமல் நினைவுக்கு வருவதே. மறக்காமல் தவறான நேரத்தில் ஞாபகப்படுத்துவதே மறதியின் மிக முக்கிய வேலைகளில் ஒன்று.
மனது கர்னாடக சங்கீதத்திலிருந்து தாவி வேறு எங்கோ போய்விட்டது. அக்கா தொடர்ந்து வேறு ஆசிரியர்களிடம் பயின்று இசையில் மூழ்கினாள். என்னால் சுப்புலக்ஷிமி டீச்சர் இருக்கும் இடத்தில் ஒரு அம்புஜம் மாமியையோ ஏன் பாலமுரளி கிருஷ்ணாவையோ கூட நினைத்து பார்க்க முடியவில்லை. பாட்டுக் கிளாஸில் இசையைத் தாண்டிய தேடலில் ஈடுபட்டு தடம் புரண்டவர்களில் நானும் ஒருவன். பசுமையான நினைவுகளாய் சுப்புலக்ஷ்மி டீச்சரோடு என் கர்னாடக இசைப் பயனம் முற்றுப்புள்ளிக்கு வந்தது.
புள்ளி கர்னாடக சங்கீதத்திற்கு மட்டுமே தவிர காதல் பயனத்திற்கு அல்ல என்பது 8ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு மழைக்காலம் புரியவைத்தது.
உபயம். ப்ரீத்தி. ப்ரீத்தி சந்திரசேகர்.
ஸ்கூல் படிக்கும் போது அதிகம் விரும்பியது காலையில் ஸ்கூலிற்கு செல்லும் அந்த பத்து நிமிட பயணம். LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே ஸ்கூல் ஒரே பாதை. ஆனால் வெவ்வேறு அனுபவங்கள். அம்மாவுடன் சைக்கிள் ரிக்ஷாவில், சைக்கிள் ரிக்ஷாவில் தனியாக, அப்பாவுடன் கைனடிக் ஹோண்டாவில், சின்ன சைக்கிளில், பெரிய சைக்கிளில், ஸ்கூடியில், பைக்கில், நண்பர்களுடன் மூன்று பேராக சென்ற அந்த இரண்டரை கிலோ மீட்டர் பாதைக்கு எனது பரிணாம வளர்ச்சி அத்துப்பிடி.இந்தப் பாதையில் மட்டுமே பல கதைகள் இருக்கிறது.
சிறு வயதில் கங்கன் என்னும் ரிக்ஷா தாத்தா தான் எனக்கு சாரதி. ஏழூ குழந்தைகளை திணித்து வாட்டர் பாட்டில் மற்றும் ஸ்கூல் பேக்குக்ளை தொங்க விட்டு கோணலாகவே போகும் ப்ளூ கலர் ஸ்கூல் வண்டி அல்ல. மோட்டார் பொருத்தி, சின்ன வேகத்துடன் ,எம்.ஜீ.ஆர் போஸ்டர் ஒட்டிய எனக்கு மட்டுமே ஓடும் மஞ்சள் நிற ரிக்ஷா. தினுமுமே அன்று காலையில் பட்டறையிலிருந்து வந்தது போல் ஒரு பெயிண்ட் மனமும், சக்கரங்களின் பளபளப்பும் ஒரு sophesticationஐ தரும். கங்கனின் வண்டியின் இருக்கை அப்படி ஒரு வசதி. 5 ஸ்டார் ஹோட்டல் சோஃபாவில் கூட அந்த சுகம் இருந்ததல்ல. உட்கார்ந்தால் காற்று உள் அமுங்கி நம் பாகங்களை அணைத்துக்கொள்வது போல் ஒரு உணர்வு ஏற்படும். இடது பக்கமும் எதிரேயும் மரத்தால் ஆன இறுக்கைகள் பொறுத்தப்பட்டிருக்கும். ஆனால் என்னை கூட்டிச்செல்லும் போது அந்த இடங்கள் எப்பொழுதும் காலியாகவே இருந்தது. வேறு யாருக்கும் இடம் கிடையாது. முன்பெல்லாம் அம்மா வருவது வழக்கம். கங்கன் என்னுடன் பழக்கமானதால் அம்மா வருவது நின்று போனது. தனியாக வேடிக்கை பார்த்தபடி ஒரு தோரணையுடன் செல்வது காலை கட்டாயங்களில் ஒன்று. மழை நீர் தேங்கியிருக்க புடவையை ஒரு இஞ்ச் தூக்கி கணுக்கால் தெரிய நடந்து செல்லும் டீச்சர்களை ரிக்ஷாவில் தாண்டும்போது அசடு வழிந்து சிரித்தபடி போன பயணங்களை நினைத்தால் இன்றும் இனிக்கிறது.
அதிலும் மழை ஆரம்பித்தால் கங்கனுடன் வண்டியில் செல்வது இன்னும் அலாதி சுகம். நான்கு பக்கமும் மஞ்சள் தார்ப்பாயிட்டு இருக்கையின் இடம் மூடப்படும். கங்கன் மட்டும் பாலுமகேந்திரா தொப்பியும் ஒரு ப்ளாஸ்டிக் ஷீட்டும் போட்டு ஒரு சூப்பர் மேன் கணக்காக நனைந்தபடி வண்டி ஓட்டுவார். நான் மஞ்சள் தார்பாயின் வெளிச்சத்தில் மழையின் சத்ததில் தனியாக பாட்டு முணுமுணுத்துக்கொண்டோ கனவு கண்டுகொண்டோ போவது வழக்கம்.
அப்படி ஒரு நாள் காலை அகட்டி பரப்பி உட்கார்ந்து செல்கையில் மழையின் வேகம் சற்று அதிகமாகவே இருந்தது. டி.டி.நியூஸிலும் சரி வானிலை அறிக்கையிலும் சரி பள்ளிகள் விடுமுறை என்று அறிவிப்பதற்கு மறந்தோ மனமில்லாமலோ தவறவிட்ட ஒரு நாள் அது. அடித்துப் பெய்த மழையில் மோட்டர் வேலை செய்யாமல் அன்று பெடல் மிதித்தே செல்ல வேண்டிய கட்டாயம். வாத்தியாருங்க வருவதே சந்தேகம் ஆனா கங்கன் வந்துட்டான் ஸ்கூல் போறியா என்ற கேள்விக்கு மறுப்பே இல்லாமல் செருப்பை மாட்டிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன். அதே மஞ்சள் தார்ப்பாய். மழை சத்தம். பேனாவை தாடையில் வைத்தபடி சிந்தித்துகொண்டே என்னுடன் மட்டும் பேசும் எம்.ஜி.ஆர் போஸ்டர். கங்கன் சீறிப்பாய்ந்து வண்டியை செலுத்தினார். தெளிவான நாட்களில் மேடு பள்ளங்கள் கங்கனுக்கு அத்துப்படி. ஆனால் அன்று கணுக்காலுக்கு மேல் தண்ணீர். மோட்டர் வேறு பழி வாங்கிவிட்டது. உட்கார்ந்து பெடல் அடித்தால் வேகம் போறவில்லை. முழு பிரயாணமும் ஏறி மிதித்தே ஓட்ட வேண்டும். கங்கன் ஒரு சூப்பர் மேன் என்பதை பெடலுக்கு பெடல் நிரூபித்து வந்துக்கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் ஏறி மிதித்து வண்டியை செலுத்த மூன்றாவது நொடி வண்டி செயின் அறுந்து நின்றது. கங்கன் பாய்ந்து கீழே இறங்கி வண்டியை பிடித்து நிறுத்தியிருக்க வேண்டும். மஞ்சள் தார்ப்பாய்க்குள் சில வினாடிகள் காற்றில் மிதந்தது போலவே தூக்கிப்போட்டது.
கங்கன் ஈரம் சொட்ட இறங்கி வந்து என்னை பார்த்து ஒன்னியும் ஆவலயே?
கொஞ்சம் அன்னாண்ட நகரு என்று நிற்கச்சொல்ல, அந்த எக்ஸ்டிரா குஷன் இருக்கையை தூக்கி அதனுள் இருக்கும் ரகசிய அறையிலிருந்து டூல் பாக்ஸ் உருவி அதிலிருந்து இரண்டு மூன்று ஸ்பேனர் எடுத்தார். எடுத்த ஸ்பேனர்களின் அளவுகளை பார்த்த போது இன்று ஸ்கூல் நேரத்திற்கு போகமுடியாது என்கிற முடிவிற்கு வந்து விட்டேன். மஞ்சள்தார்ப்பாயின் விளிம்பில் நின்றதில் முதுகு மொத்தமும் நனைந்தும் போனது. தடல்புடலாக சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்க முன்னும் பின்னும் ஆடி நான்கு ஐந்து நிமிடத்தில் ரிக்ஷா சொல்பேச்சு கேட்டது. ஆனால் மழை கேட்டபாடில்லை. மீண்டும் டூல் பாக்ஸ்களில் ஸ்பேனர்களை திணித்து வண்டி புறப்பட நான் மொத்தமாக நனைந்து போனேன். குளிர் எடுக்க ஆரம்பித்தது.
நல்ல குளிர் எடுக்கும் போது கடவுள் நம் அருகாமையில் இருக்கிறார் என்பதை நம்மால் உணரமுடியும். எப்படி? குளிர்கால நள்ளிரவுகளில் மின் விசிறியின் வேகத்தை குறைக்க மறந்த அந்த நிமிடம் அரைத்தூக்கத்தில் காலால் தேடி கட்டைவிரலால் இடறி இழுத்துப் போர்த்திக்கொள்வோமே அந்த காட்டன் போர்வை தான் கடவுள். இதமான குளிரில் மழையில் ஒதுங்கும் டீ கடையில் அப்பொழுது போட்ட வாழைக்காய் பஜ்ஜியும் இஞ்சி டீ யும் கையில் மூன்று நான்கு பேர் தாண்டி தாவி வருமே அதுவே கடவுள். அன்றைய மழைக்கும் முக்கால் வாசி நனைந்த குளிருக்கும் எனக்கு ஏற்பட்ட இதமான கடவுள் அனுபவம், அவளின் அறிமுகம்.
சில வினாடிகள் நகர்ந்த வண்டி மீண்டும் நின்றது. இந்த முறை எதற்கு என்று தெரியவில்லை. வெளியே யாரோ பேசுவது மட்டும் கேட்டது.
இந்த மழைல ஸ்கூல் இருக்குமா..
இருக்குதேமா…புள்ளீங்கலாம் போதே…ரெண்டு மூனு வாத்தியாருங்கள கூட பார்த்தேன். இருக்குது இருக்குது…நீயும் ஏறிக்கிறியா?
சரி ஸ்கூல்ல விட்டுட்றியா….காசு தர்றேன்….
காசுலாம் வோணாம்..உள்ள ஏற்கனவே ஆள் இருக்கு… இன்னிக்கு ஒரு நாளைக்கு பரால்ல. குந்த சொல்லு..
ஸ்கூல் இல்லன்ன வாசலோட திரும்பி Ghar mein chod dho!..
இன்னா பேசற நீ ஒன்னியும் புரீல்லயே
மழைல நனையவிடாத..அவளுக்கு ஒத்துக்காது.
கடைசியில் சொன்ன “அவளுக்கு ஒத்துக்காது” என்கிற பாலின வார்த்தை அடையாளம் சுட்டிக்காட்ட எனக்கு ஆவல் அதிகமானது.
மஞ்சள்தார்ப்பாய் சனல் வேறு இறுக்கமாக கட்டியிருக்க விரலால் கஷ்ட்டப்பட்டு விலக்கி, கண்களை 27.4 டிகிர்யின் கோணத்தில் பொருத்திப் பார்க்க ஒரு வெள்ளைப் பெண்மணியின் இடுப்பும் ஈரம் சொட்ட விலகியிருந்த பர்ப்பிள் புடவையும் தெரிந்தது. கண்கள் அலைபாய… பின்னாலிருந்து ஒரு சின்னப்பெண் குடையுடன் எட்டிப்பார்த்து மழையை ரசித்தபடி நிற்பது போல் இருந்தது. கண்கள் வேறு கோணத்திற்கு மாற துடித்தது. விரலை இன்னும் அழுத்தி விலக்க, இன்னும் கொஞ்சம் இடம் கிடைத்தது. 47.8 டிகிரியில் இப்பொழுது பார்க்க முடிந்தது.
கையை குடைக்கு வெளியே நீட்டி தண்ணீரை தத்தளித்து மழையுடன் விளையாடுவது தெரிந்தது. முதுகில் இரண்டு வைத்து அம்மா அவளின் கையை இழுத்து குடைக்குள் அடக்கி அருகே வருவது தெரிந்தது.
கங்கன் மஞ்சள்தார்ப்பாயை ஒற்றை அசைவில் அவிழ்த்தான். காற்று வீசியது. எதிரே குடை நொடிந்து பறந்தது. என் தலைமுடி கலைந்தது. அம்மாவின் புடவை மேலும் நழுவ சின்னப்பெண்ணின கைகள் தளர்த்தப்பட்டது. சந்தோஷமக துள்ளி குதித்து என் சமவயதுப் குட்டிப்பெண் முழுவதுமாக நனைந்து ஆட்டம் போட்டது. ஆட்டத்தின் நடுவே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த என்னையும் கங்கனையும் பார்த்து சிரித்தது.
என்னையா பார்த்தா ? என்னயா பார்த்து சிரிச்சா?என்ன ஏற்கனவே தெரியுமா? நான் இப்போ தான முதல் தடவ பாக்குறேன் என்கிற கேள்விகள் அடுக்கிக்கொண்டே போக நெருங்கி வந்து எகிறி குதித்து வண்டியில் ஏறிக்கொள்ள வண்டி குலுங்கி அடங்கியது. என் கண்கள் வேறு எங்கும் அசையவில்லை தடம்மாறவில்லை. ஃபோகஸ்ட்.
புரியுதுல்ல…ஸ்கூல் இல்லன்னா திருப்பி கொண்டு வந்து விட்டுல இறக்கிடு என்று பேசுகிற அம்மாவின் வசனம் எனக்கு ரெண்டு தெரு தள்ளி பேசுவது போல் இருந்தது.
வண்டியில் அமர்ந்து சத்தமாக டாட்டா சொல்லி இரண்டு மூன்று பறக்கும் முத்தங்களை அம்மாவிற்கு வழியனுப்பிவிட்டு கவனச்சிதறாலாய் நான் அவளின் கண்களில் பட்டேன். நான் உணர்ந்துக் கொண்டிருந்த பரவசம் அவளுக்கு விளங்கியிருக்க வேண்டும். சின்னதாக சிரித்து ஆமோதித்துக்கொண்டாள். நான் நனைந்திருப்பதை கண்டு சிரித்தாள். என் கையில் உள்ள சின்ன கடிகாரத்தைப் பார்த்து அவ்வளவு ஆச்சர்யப்பட்டாள். சட்டென்று என் கைகளைப் பிடித்து திருப்பி மணி என்ன ஆகிறது என்று பார்த்துக்கொண்டாள். அவள் கைகளில் கடிகாரம் இல்லாதது எனக்கு குறையாகவே தெரியவில்லை. காலத்திற்கும் கடிகாரத்திற்கும் அந்த அழகு கைகளில் அடங்குவதற்கு கொடுத்துவைக்கவில்லை.
இன்னும் 2 நிமிஷத்துல ஸ்கூல் கேட் மூடிடுவாங்கல்ல?
ஆமாம் என்கிற பதிலை நான் கூறவில்லை. என் நிலைமையை புரிந்த உதடுகள் மூளையின் பேச்சைக்கேட்டு தானாகவே பதிலளித்துக்கொண்டது. உளறிய பதிலை என்னால் இரண்டு வினாடிகள் கழித்தே உணர முடிந்தது.
கங்கன் வண்டியை நகர்த்த மணி பார்க்க பிடித்த கைகள் விழாமல் இருக்க இன்னும் இறுக்கமாக பிடித்தன. என் இதயம் மழை தாளத்தில் இடிகளுடன் சேர்ந்து துடிக்க ஆரம்பித்தது.
அடித்து பேய்ந்த மழைக்கு நடுவே சற்று சத்தமாக பேசியதும் சட்டென்று துண்டித்த உறையாடலும் இன்றும் காதுகளில் எதிரொலியாக கேட்டுக்கொண்டிருக்கிறது. மழையை கவனிக்க கற்றுக்கொடுத்த பெண்ணை எப்படி எளிதில் கடக்க முடியும்.
நேரங்காலம் பாராமல் என்றைக்கோ மறந்து போன அலைபாயுதே கண்ணா பாடல் என்னுள் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது. நெடு நாட்களுக்கு பிறகு அதே பாடல் ஆனால் வேறு ஒரு உணர்வு. வேறு ஒரு பெண். என் வயதுப் பெண். சமவயதுப்பெண். என் பள்ளிக்கூடப்பெண். இனி இந்த பாடல் அடிக்கடி ஒலிக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டேன்.
மஞ்சள் தார்ப்பாய் படபடத்து விலகி அவள் வெள்ளையை இன்னும் கூட்டி காண்பித்தது. கண்கள் அவளை விடுவதாயில்லை. தவிக்காமல், இமைக்கத்துடிக்காமல் அவளிடம் சிறைபட்டது.
ரிக்ஷா நின்றது. தார்ப்பாய் அவிழ்ந்தது. தலை நீட்டி எட்டிப்பார்க்க ஸ்கூல் கதவுகள் மூடியிருந்தது. அருகே இருந்த மரப்பலகையில் இருந்த விடுமுறைச் செய்தி மழையில் அழிந்து போயிருந்தது. வாட்ச்மேன் விடுமுறையை காட்டுக்கத்தலாய் கத்திக்கொண்டிருந்தார்.அங்கு வந்த பல சைக்கிள்கள், ரிக்ஷாக்கள், ஸ்கூட்டர்கள் வாசலோடு சந்தோஷமாக திரும்பிக்கொண்டிருந்தன.
ஜாலிதான் போ என்று கங்கன் என்னை பார்த்து கண் அடித்ததும் நான் அதிர்ந்து போனேன்.
ஸ்கூல் லீவுபா…ஜாலிதானே?.
இந்த பொண்ண எறக்கி விட்டுட்டு போயிடுவோம் என்று ரிக்ஷாவை வேகமாக திருப்ப அவள் என்மேல் லேசாக சாய நேர்ந்தது.
ஹப்பாடா..வீட்டுக்கு போயி ஜாலியா ஜன்னல் பக்கம் உக்காந்து வேடிக்க பாக்கலாம்…நீ என்ன பண்ணப்போற.
ஆன்?
வீட்டுக்கு போய் என்ன பண்ணப்போற?
எங்க வீட்டு ஜன்னல் லேந்து மழை தெரியாது.
ஏய்…மக்கா நீ? அதெப்படி? ஜன்னல்னா மழை தெரியனும்ல?
இல்ல? அது என்னமோ நான் பார்த்ததே இல்ல…
இன்னிக்கி போய் பாக்றியா?சூப்பரா இருக்கும்.. சில்லுன்னு காத்து, கம்பத்துல நிக்கிற குருவி, தானா நடந்து போகுற கருப்பு குடை…என்று சிரிக்க
அப்பறம்?
அப்பறம்? ஒருவித silence….
ஆன்?
Silence… அமைதி. இதெல்லாம் எல்லா ஜன்னல்லேந்த்தும் தெரியும். நீ பாக்குறியா?
அதெப்படி எல்லா ஜன்னலேந்தும்…நம்ப முடியல
நம்பு…bye
அவள் வீடு வந்தது. அம்மா வாசலில் நின்று கொண்டிருந்தாள். இப்பொழுது புடவை சீராக இருந்தது. வண்டி நின்றது. மீண்டும் ஒரு ஆட்டத்துடன் துள்ளி குதித்து இறங்கியவள் யாருக்கும் பயப்படாமல் திரும்பிப் பார்த்தாள். அங்கு என்னையும் கங்கனையும் தவிர வேறு யாரும் இல்லை.
சிரித்தாள்.
நான் கங்கனைப் பார்க்க, கங்கன் திரும்பி தொப்பி சரி செய்து கொண்டிருந்தார். அப்படியென்றால் என்னைப் பார்த்து தான் அந்த சிரிப்பு உதிர்ந்திருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியது.
நானும் சிரித்தேன்.
நான் ப்ரீத்தி….நீ? என்று மழைக்கு நடுவே மீண்டும் குரல் உயர்த்தி கேட்க
சூர்யா…நீ?
வெடித்து சிரித்து…தலையில் அடித்துக்கொண்டு ‘சொன்னேனே… ப்ரீத்தீதீதீ…’
நாயகன் கமல்ஹாசனை உள்வாங்கி சூர்யா…சூர்யா என்று இரண்டு முறை கத்த என் பெயர் எனக்கு இன்னும் அழுத்தமாக பதிந்து போனது.
அங்கிருந்து வீடு வரை நீண்ட பயணத்தில் மேலே கூறிய கங்கனின் ரிக்ஷா வசதிகள் அத்தனையும் அவஸ்தைகளாகவே இருந்தது. மஞ்சள் தார்ப்பாய் மூச்சு முட்டியது. 5 ஸ்டார் இருக்கை எரிச்சல் மூட்டியது. எம்.ஜி.ஆர் நம்பியாரானார். குலுக்கல்களுக்கும் பள்ளங்களுக்கும் கோவம் வந்தது. அவசரம்.
கொஞ்சம் சீக்கிறமா போறீங்களா?
தோ..வந்துடுச்சுபா..இன்னா இப்ப.
வண்டி ராயப்பேட்டை லாயட்ஸ் ரோடு 326 வந்து நின்றது. அவசரமாக இறங்க ஸ்கூல் பையின் விளிம்பில் மாட்டி மஞ்சள் தார்ப்பாய் சின்னதாக கிழிந்தது. கங்கன் கத்தினார்.
நான் வேகமாக என் வீட்டுப் படி ஏறினேன். வாசலில் ஷூ மூலைக்கு ஒன்றாய் சிதறியது. தோள்பட்டை அழுத்திய பை நடு ஹாலில் தொப்பென்று விழுந்தது, கழற்றிய ஸ்கூல் சட்டை அழுக்குக் கூடையில் தொங்கியது. ஈரம் காயவில்லை. Tape recorderல் ஒரு casette இட்டு ப்ளே தட்ட. பாதியிலிருந்து SPB எனக்காக பாடித்துவங்கினார்.
‘உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு’
குளிர்ந்தது.
நல்ல குளிர் எடுக்கும் போது கடவுள் நம் அருகாமையில் இருக்கிறார் என்பதை நம்மால் உணரமுடியும். எப்படி?
எங்கள் வீட்டு ஜன்னல் அருகே வந்து உட்கார்ந்து கொண்டேன். வெளியே பார்க்க அவள் சொன்னது போலவே கம்பத்தில் ஒரு குருவி நின்று கொண்டிருந்தது. கீழே ஒரு கருப்புகுடை வேகமாய் நடந்து சென்றது.
அப்பறம்?
அப்பறம்..Silence!
வெளியே மிகப்பெரிய அமைதி சூழுந்து கொண்டது. அந்த அமைதி இன்னும் கொஞ்சம் நேரம் இன்னும் கொஞ்சம் நேரம் என்று நீண்டு கொண்டேயிருந்தது.
மழை, ஜன்னல், அமைதி மூன்றுமே கடவுளின் அம்ஸம் என்று அன்றைய தினம் புரிந்து போனது.