
வாழும் சித்தர் ஐயா அவர்களுக்கும் எனக்கும் பத்து வருட பந்தம். வாஇந்த பந்தம் ஏற்படுத்தப்பட்டது. என் குருநாதர் வாப்பா செய்யது பாவா அவர்களால். ஆம்….என் உயிரினும் மேலான என் மகன் நெய்னார் முகம்மதுவுக்கு ஒரு கண்டம் ஏற்பட்டது. அவர் அதிலிருந்து மீள, இறைவனிடம் நான் கெஞ்சிக் கதறிக்கொண்டிருந்த நேரத்தில், என் குருநாதரிடமிருந்து அலைபேசி அழைப்பு.
உனக்கு எழுத்தாளர் பாலகுமாரனைத் தெரியுமா?….
தெரியாது வாப்பா….. கேள்விப்பட்டிருக்கிறேன்…. என் பேரன்
திப்புசுல்தானுக்காக, அவரிடம் சொல்லி பிரார்த்தனை பண்ணிக்
கொள்ளச் சொல்….. நல்லது வாப்பா.
ஐயாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு, அழுதுகொண்டே என் மகனைப் பற்றிய விவரங்களைச் சொல்லி, பிரார்த்தனை பண்ணக் கேட்டுக் கொண்டேன். அழாதே ராஜ்கிரண்…. உன் மகனுக்கு பேரை மாத்திடலாமா என்றார். என்னடா இது, சம்பந்தமில்லாமல் பேசுகிறாரே என்று எனக்குள் ஒரு சிறு குழப்பம். அதைத் தவிர்த்துக் கொண்டு, ஐயா, திப்புசுல்தான் மாமன்னர் கட்டிய ஸ்ரீரங்கப்பட்டணம் மசூதியில் நான் தொழப் போயிருந்த பொழுதில் மாமன்னர் திப்புசுல்தான் அவர்களும், என் குருநாதர் செய்யது பாவா அவர்களும் இறைவனிடம் எனக்காகக் கெஞ்சிஅதன் பயனால் எனக்குக் கிடைத்தவர் என்று நான் நம்பும் என் மகனுக்கு. என் குருநாதரும் நானும் ஆசையோடு வைத்த பெயர் திப்புசுல்தான். அதை எப்படி மாற்றமுடியும்….. நான் பேசி முடிக்க, அலைபேசியை துண்டித்து விட்டார். நுங்கம்பாக்கம் Child Trust மருத்துவமனையில், ஆபரேஷன் தியேட்டரில், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு, எந்தக் குறையுமில்லாமல் என் மகன் எனக்குக் கிடைத்தார்.
ஐயாவின் பிரார்த்தனைக்கு நன்றி சொல்ல. குடும்பத்தோடு அவர் வீட்டுக்குச் சென்றோம். நன்றி சொல்ல என்னை அவர் விடவில்லை. என் மனைவியைப் பார்த்துக் கேட்டார். பத்மாவதி, ராஜ்கிரணுக்கும் எனக்கும் என்ன உறவு தெரியுமா? ஐயாவை முதன் முதலாக அப்பொழுதுதான் நானே பார்க்கிறேன். அதனால் எனக்கும் என் மனைவிக்கும் ஒரே குழப்பம்.
அவரே தொடர்ந்தார். ராஜ்கிரண் என் நண்பன். இது ராஜ்கிரணுக்கே தெரியாது. உனக்கு எங்கே தெரியப் போகுது. நேரம் வரும் போது எல்லோருக்கும் தெரியும் என்று கூறிக்கொண்டே என் கையைக் கெட்டியாகப் பிடித்தபடியே என்னை அணைத்துக் கொண்டார்.
என் மெய்சிலிர்த்து, உடல் நெக்குறுகி, கண்ணீர் மல்கியது.
என் மகனின் பெயரை ஏன் மாற்றச் சொன்னார் என்ற குழப்பத்திற்கு அப்பொழுதுதான் எனக்கு விடை சொன்னார்.
திப்பு சுல்தான் என்பது சாதாரணமன்னனோ, சாதாரண ஆத்மாவோ அல்ல. அது பெரும் ஜுவாலை….. அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி யாருக்கும் கிடையாது. அதனால்தான் அந்தப் பெயரை மாற்றச் சொன்னேன் என்றார். ஐயா என் மகனுக்கு வைத்த பெயர் தான் நைனார் முஹம்மது. இந்தப் பெயர் மாற்றம் குறித்து என் குருநாதர் வாப்பா செய்யது பாவா அவர்களிடம் சொன்னதும் மகிழ்ந்து போனார்.
மற்றுமொரு நாளில், ஐயாவைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றிருந்தபொழுது, ராஜ்கிரண், “உன் குருநாதர் செய்யது பாவா அவர்களை பார்க்கணும் போல இருக்கு. என்னை கூட்டிக்கிட்டுப் போறியா?” என்று ஒரு குழந்தையின் குதூகலத்தோடு என்னிடம் கேட்டார். அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது. என் குருநாதர் செய்யது பாவா அவர்களுக்கும். அவரால் கைகாட்டப்பட்ட வாழும் சித்தர்,எனது இன்னொரு குருநாதர் ஐயா அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது.
ஆன்மிகம் என்பது ஆழம் காணமுடியாப் பெருங்கடல். இந்துத் தத்துவங்கள் பலவற்றை வாப்பா செய்யது பாவா அவர்கள் எனக்கு அவ்வப்போது விளக்குவார். குர்ஆனிலிருந்து பல விஷயங்களை பாலகுமாரன் ஐயா அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொள்வார். இந்தப் பத்து வருடங்களாக ஐயாவைக் கலந்து கொள்ளாமல் என் குடும்பத்தில் எதுவும் நடத்ததில்லை.
குருமார்கள் கிடைப்பதென்பது இறைவனின் மிகப்பெரும் கருணை….