திரு.பாலகுமாரன் அவர்களைப்பற்றி நினைக்கும் போது பல எண்ணங்கள்; பல நினைவுகள் சுமார் 32 வருடங்களுககு முன்னால் திரு.பாலசந்தர் அவர்கள் சொல்லி, ஏதோ ஒரு பத்திரிகைக்காக பேட்டி எடுக்க என்னிடம் வந்தார்கள்.
திரு.பாலகுமாரன் அவர்கள் அன்று அவர் என்னிடம் கேட்ட கேள்விகள் அதுவரை என் வாழ்க்கையில் நான் சிறிதளவும் நினைத்து பார்க்காத, எதிர்பார்க் காத, யாருமே என்னிடம் கேட்காத கேள்விகள். அவர் ஒரு வித்தியாசமான மனிதர் என்பதை அன்றே நான் உணர்ந்தேன். “பாட்ஷா” படத்தில் நடிக்கும் போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர், இருந்தும் அதைப்பற்றி அவர் எங்கும் யாரிடமும் அதைப்பற்றி பேசியது கிடையாது. “பாட்ஷா” படத்தில் நான் பேசிய ஒவ்வொரு வசனமும் பாலகுமாரனின் சிந்தனையில் உதித்த முத்துகள். அந்த படத்தில் என்னுடைய நெருங்கிய நண்பராகிவிட்ட பாலகுமாரன் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்பதைவிட அவர் ஒரு ஞானி என்கிற நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டது; என்னுள் இருந்த எங்களது நட்பையும் மீறி அவர்மீது அதிக மதிப்பையும், மரியாதையையும் உண்டாக்கியது என்பது தான் உண்மை. இன்றளவும் நான் அவருடைய நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குதான் பெருமை.
எழுபதாம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் திரு. பாலகுமாரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் ஆண்டவன் இவருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மனநிம்மதியையும் கொடுத்து, இவர் மேலும் பல சாதனைகளை புரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்..